வர்த்தக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை டிசம்பர் மாதம் முதல் நாளான இன்று (1.12.2021) 101 ரூபாய் அதிகரித்துள்ளதால் வணிகர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணை நிறுவனங்கள் சமையல் எரிவாயு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை மாதந்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன.
சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இன்று (1.12.2021) சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை 101 ரூபாய் உயர்ந்து, 2,234.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒரே ஆண்டில் 770 ரூபாய் உயர்ந்துள்ளதும், முன்னதாக அக்டோபர் 6 ஆம் தேதி 1865 ரூபாய்க்கு விற்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் நாடு முழுவதும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை எனவும், கடந்த மாதம் விலையே தொடர்வதாக எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தற்போது வீட்டு உபோயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் சென்னையில் ரூ.915.50-க்கு விற்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களில் வணிகப் பயன்பாடு கொண்ட சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்வதால், வணிக ரீதியான தொழில் சார்ந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலை 100 ரூபாயை கடந்து உள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கேஸ் சிலிண்டர் விலையும் அதிகரித்து இருப்பதால் ஓட்டல் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சென்னை ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் ரவி தெரிவித்துள்ளார்.