ராம்குமார் சிறை மரணம் தொடர்பான வழக்கை மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி காலை அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தப் படுகொலை குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஜூலை 1 ஆம் தேதி, திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் ராம்குமார் (22) என்ற இளைஞரைக் கைது செய்தனர். பின்னர், ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராம்குமார் அடுத்த சில வாரங்களில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் ஒயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இந்த வழக்கு குறித்த விசாரணையை மாநில மனித உரிமை ஆணையமும் நடத்தி வருகிறது.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னை மத்திய சிறைச்சாலையின் ஓய்வுபெற்ற சூப்பிரண்டு அன்பழகன் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் சுவாதி கொலை வழக்கு குறித்து சுட்டிக் காட்டியுள்ள அவர், கைது செய்யப்பட்ட ராம்குமார் உயர் பாதுகாப்பு பிரிவு சிறையில் அடைக்கப்பட்டு இருந்ததாக தெரிவித்திருந்தார்.

தண்ணீர் குடிப்பதற்காக வெளியே வந்தவர் அங்குள்ள மின்சார சுவிட்பாக்சை, உடைத்து ஒயரை பிடித்து தற்கொலைக்கு முயன்று,பின்னர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்து விட்டதாகவும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இந்த வழக்கு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அது தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ராம்குமாரின் உடல் எய்ம்ஸ் மருத்துவர் தலைமையில், பரிசோதனை செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மின்சாரம் தாக்கி தான் ராம்குமார் இறந்தார் என்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் திருவள்ளூர் மாஜிஸ்திரேட்டும் விசாரித்து அறிக்கை சமர்ப்பித்து உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர்,

சம்பவம் நடந்து ஒரு வருடத்திற்குள் தான் தன்னிச்சையாக மனித உரிமை ஆணையம் வழக்கு தொடர முடியும் என்றும், ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு விசாரிக்க முடியாது என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்த வழக்கில் தேசிய மனித உரிமை ஆணையம் விசாரித்து வழக்கை முடித்து வைத்த நிலையில், மாநில மனித உரிமை ஆணையம் தன்னிச்சையாக வழக்கு தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.கல்யாணசுந்தரம், சிவஞானம் அமர்வு, மாநில மனித உரிமை ஆணையம், ராம்குமார் வழக்கை விசாரிப்பதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் மனித உரிமை ஆணைய பதிவாளர் பதில் அளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளனர்.

முன்னதாக ராம்குமாரின் உடலில் மின்சாரம் பாய்ந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று மாநில மனித உரிமைகள் ஆணையம் முன் ராம்குமாரின் உடலை உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.