பிளஸ் 2 பொதுத் தேர்வில், மார்ச் 24 ஆம் தேதி நடத்தப்பட்ட இறுதி பாடத்தேர்வை எழுதாத மாணவர்களுக்கு மட்டும் ஜூலை 27 ஆம் தேதி தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி மாலை முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அன்று நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வின் இறுதி பாடங்களுக்கான (வேதியியல், புவியியல், கணக்கு பதிவியல்) தேர்வை, தமிழகம் முழுவதும் மொத்தம் 32 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை.
இதன் காரணமாக, பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுத தவறி மாணவர்களுக்கு ஜூலை 27 ஆம் தேதி அந்த தேர்வு நடத்தப்படும் என்றும், மாணவர்களுக்கு அவரவர் பள்ளிகளிலேயே இத்தேர்வு நடத்தப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க: கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கும் எட்டுமா அரசின் ஆன்லைன் வகுப்புகள்…
இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை ஜூஸை 13 -17 ஆம் தேதி வரை மாணவர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தங்களது பள்ளிகளுக்குச் சென்றும் ஹால் டிக்கெட்களை நேரிலும் பெறலாம். தனித்தேர்வுகள், தங்களுக்கான தேர்வு மையங்களில் ஹால் டிக்கெட்களை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படாது எனவும், மாணவர்களின் தேவைக்கேற்ப அவர்கள் தேர்வு மையங்களுக்கு சென்றுவர போக்குவரத்து வசதி செய்து தரப்படும் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.
மார்ச் 24 ஆம் தேதி நடைபெறவிருந்த இறுதி பாடத் தேர்வை, எழுத தவறிய மொத்தம் 32 ஆயிரம் மாணவ, மாணவியர்களில் 786 பேர் மட்டுமே தற்போது தேர்வெழுத விருப்பம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.