முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், மணிகண்டனிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னாள்அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி பாலியல் புகார் கொடுத்தார். அதில் தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஆசைகாட்டி நெருக்கமாக பழகி சென்னை பெசன்ட் நகரில் தனி வீட்டில் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்ததாகவும், கட்டாயப்படுத்தி 3 முறை கருக்கலைப்பு செய்ததாகவும் புகாரில் கூறி இருந்தார்.
அவரது புகாரின் பேரில் அடையார் மகளிர் கவால்துறையினர் மணிகண்டன் மீது 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து தலைமறைவான அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பெங்களூருவுக்கு அருகே உள்ள தம்மநாயக்கனஹள்ளி பகுதியில் கடந்த மாதம் 20 ஆம் தேதி தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனுக்கு ஜூலை 2 வரை நீதிமன்ற காவல் வழங்கி சென்னை சைதாப்பேட்டை 17வது அமர்வு நீதிபதி கிருஷ்ணன் உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனையடுத்து மணிகண்டன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தன் மீது கூறப்பட்ட புகாரில் எந்த உண்மையும் இல்லை. நான் யாரையும் ஏமாற்றவில்லை. புகார் கொடுத்துள்ள சாந்தினி நன்கு படித்தவர். எல்லாம் தெரிந்தவர்.
நான் திருமணம் ஆனவன் என்பதும் அவருக்கு தெரியும். அவருக்கு ரூ.5 லட்சம் கடன் கொடுத்திருந்தேன். அதை திருப்பி கேட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இவ்வாறு பொய் புகார் கொடுத்துள்ளார் என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் மணிகண்டனிடம் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் போலீஸ் காவலுக்கு அனுமதிக்கும்படி காவல்துறை தரப்பிலும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி மணிகண்டனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனுக்கு 2 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டனர்.
இந்நிலையில் மணிகண்டனை காவல்துறையினர் மதுரை மற்றும் ராமநாதபுரம் ஆகிய இடங்களுக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் மணிகண்டனின் 2 செல்போன்களையும் கைப்பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலியல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது; ஜூலை 2 வரை நீதிமன்றக் காவல்