இந்தியாவில் தற்போது ரூ.150க்கு வாங்கப்பட்டு வரும் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை முறையே ரூ.215, ரூ.225 என்ற அதிக விலைக்கு கொள்முதல் செய்ய ஒன்றிய பாஜக அரசு புதிய ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளை ஒன்றிய அரசு நேரடியாக கொள்முதல் செய்து மக்களுக்கு செலுத்தி வருகிறது. முதலில் முன்களப் பணியாளர்கள், 45-60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என தடுப்பூசி போடப்பட்டது. இதற்காக, மருந்து நிறுவனங்களுடன் 50% தடுப்பூசியை ஒன்றிய அரசு கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்து வந்தது.

18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கிய போது, அதற்கு மாநிலங்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஒன்றிய பாஜக அரசு உத்தரவிட்டது சர்ச்சையாக வெடித்தது. அனைவருக்கும் தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியதுடன், அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை என தெரிவித்தது. இதனையடுத்து, கடந்த ஜூன் 21 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.

அதன்படி, மருந்து நிறுவனங்களிடம் இருந்து 75% ஒன்றிய அரசு நேரடியாக கொள்முதல் செய்யும், 25% தனியார் மருந்துவமனைகள் கொள்முதல் செய்து கொள்ளலாம், தடுப்பூசிக்கான ஜிஎஸ்டியையும் ஒன்றிய அரசே செலுத்தும் என தெரிவிக்கப்பட்டது.

ஒன்றிய அரசு தற்போது கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை ஒரு டோஸ் ரூ.150 என்ற விலையில் வாங்கி வருகிறது. இந்த விலையில் தொடர்ந்து கொடுப்பது சாத்தியமில்லாத ஒன்று. எனவே, தடுப்பூசி உற்பத்தி விலையை உயர்ந்த ஒன்றிய அரசு பரிசீலினை செய்ய வேண்டும் என சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்கள் கோரிக்கை வைத்தன.

இதனையடுத்து, மருந்து நிறுவனங்களுடன் ஒன்றிய அரசு தற்போது புதிய ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, வரி இல்லாமல் கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு டோஸ் ரூ.205, கோவாக்சின் ரூ.215 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரியுடன் சேர்ந்து கோவிஷீல்டு ரூ.215, கோவாக்சின் ரூ.225 என விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த புதிய விலையில் டிசம்பருக்குள் கோவிஷீல்டு 37.5 கோடி டோஸ், கோவாக்சின் 28.5 கோடி டோஸ் என மொத்தம் 66 கோடி டோஸ் தடுப்பூசிகளை வாங்குவதற்கு ஒன்றிய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. பழைய விலையுடன் ஒப்பிடுகையில் கோவிஷீடு ரூ.3,987 கோடியும், கோவாக்சின் ரூ.5,913 கோடியும் கூடுதலாக கொடுத்து ஒன்றிய அரசு தடுப்பூசி வாங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒன்றிய அரசு கூறும் தடுப்பூசி முயற்சிகள் தொடங்கப்பட்டு ஆறு மாதங்கள் ஆகியும் இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இதுவரை ஐந்து சதவிகிதத்துக்கும் சற்று அதிகமானவர்களுக்கே முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் 16 ஆம் தேதி தடுப்பூசி வழங்கல் தொடங்கியதில் இருந்து இதுவரை சுமார் 39 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக சுமார் 31.5 கோடி பேருக்கு முதல் தவணை தடுப்பூசி மட்டும் கிடைத்துள்ளது. 7.9 கோடி பேருக்கு மட்டும் இரண்டு தவணை தடுப்பூசிகளும் கிடைத்துள்ளன.

ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் இடைப்பட்ட காலத்தில் 135 கோடி தடுப்பூசிகள் கிடைக்கப் பெறும் என்று ஒன்றிய அரசு கடந்த ஜூன் மாதம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால் தடுப்பூசி பற்றாக்குறை தொடர்ந்து நீடித்துக் கொண்டே செல்வதால், ஒன்றிய அரசு கூறியபடி இந்த ஆண்டின் இறுதிக்குள் தடுப்பூசி பெறுவதற்கான தகுதி உடைய அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் இலக்கை அடைய முடியாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.