புல்வாமா தாக்குதல் குறித்து குற்றம் சாட்டிய அகிலேஷ் யாதவ் மத்திய அரசு தானே ராணுவம்போல செயல்படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
 
ட்விட்டர் தளத்தில் தற்போது கடும் கருத்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக இந்திய அரசு ராணுவத்தை பகடைக்காயாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார்.
 
சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ராம்கோபால் யாதவ், ”புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவமே தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்கான ஒரு கவன ஈர்ப்பு சதி” என்று விமர்சனம் செய்திருந்தார்.
 
அதேபோல, பாலகோட் தாக்குதல் குறித்து மேலும் அறிய விரும்புவதாக காங்கிரஸின் சாம் பிட்ரோடா கேட்டிருந்தார்.
 
ஆனால் இக்கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்த பிரதமர் மோடி தன் ட்விட்டர் பதிவில், ”எதிர்க்கட்சிகளே பயங்கரவாதத்தின் ஆதரவாளர்களாக மாறி நமது ஆயுதப்படையை கேள்வி கேட்கிறார்கள். அவர்கள் பயங்கரவாதத்தின் வக்கீல்களாகவும் மாறிவிட்டார்கள் என ஆவேசத்துடன் டீவிட் செய்ய பரபரப்புக்கு சமூகவலை தளத்தில் பஞ்சமே இல்லை
 
மேலும் மோடி “ராம்கோபால் ஜீ போன்ற ஒரு மூத்த தலைவரின் இந்த மோசமான அறிக்கை, காஷ்மீரைப் பாதுகாப்பதில் தங்கள் இன்னுயிரைத் தந்த அனைவரையும் அவமானப்படுத்துகிறது. நமது தியாகிகளின் குடும்பங்களை இழிவுபடுத்தும் இச்செயல் கண்டனத்திற்குரியது” என்றார்.
 
 
சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பிரதமருக்குப் பதிலளிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ”ஆயுதப்படையின் தியாகங்களை யாரும் கேள்விக்குட்படுத்தவேயில்லை. புல்வாமா தாக்குதல் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை பிரதமர் தொடர்ந்து தாக்கி வருகிறார்.
 
அரசியல்வாதிகள் கேள்வி கேட்பது என்பது ஒரு ஜனநாயக நாட்டில் அடிப்படை உரிமையாகும். ஆனால் அவர்களைக் கேள்வி கேட்க முடியாது என்ற நிலை ஏற்படுமேயேனால் அது மிகவும் ஆபத்தானது.
 
மக்களைத் திசைதிருப்பவே இத்தாக்குதல் நாடகங்கள். மத்திய அரசு தானே ராணுவம்போல செயல்படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.
 
இதற்கிடையில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், ”ராம்கோபால் யாதவின் கருத்துகள் மோசமான அரசியலுக்கு மிகப்பெரிய உதாரணம் ஆகும். மேலும் அவரது இந்தக் கருத்து ஆயுதப்படைகள் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இந்தக் கருத்துகள் ஜவான்களின் மனவலிமையை பலவீனப்படுத்தக் கூடும்.
 
இத்தகைய அறிக்கைகள் சிப்பாய்களின் மன உறுதியைக் குலைக்கும் மற்றும் பயங்கரவாத அமைப்புகளின் மனபலத்தை உயர்த்தும்” என்றார்.
 
ஆனால் இதறுக்கு எல்லாம் அசராக ராம்கோபால் யாதவ் தனது பதிவில், ”இது ஒரு சதியாகும். ஆனால் ஆட்சி மாறும்போது, ஓட்டு அரசியலுக்காக யார் இத்தகைய உயிரிழப்புகளுக்கு காரணமானவர்களோ அவர்கள்மீது விசாரணைகள் நடத்தப்படும். இதற்கு பொறுப்பானவர்கள் பரிசோதனைக்குட்படுத்தப்படுவார்கள்” என்றார்.
 
இதை தொடர்ந்து மீண்டும் அகிலேஷ் தனது பதிவில், ”புல்வாமா தாக்குதலின்போது சிப்பாய்கள் உயிர்த் தியாகம் செய்ததற்கு மத்திய அரசின் புலனாய்வுத்துறை தோல்வி காரணமாக இருந்தது.
 
ராணுவத்திற்காக பாஜக என்ன செய்துவிட்டது. நாட்டு மக்களுக்கு உணவுதான் தேவை துப்பாக்கியல்ல” என்று தெரிவித்தார்.