பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை எமர்ஜென்சி பயன்பாட்டுக்கு உபயோகிக்க மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் (CDSCO) நிபுணர் குழு பரிந்துரை வழங்கி உள்ளது.
உலக அளவில் கொரோனா வைரஸ் அதிகம் பரவிய நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. வைரஸ் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
அதில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனகா நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசியை அஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் உருவாக்கியுள்ளது.
அதேபோல் இந்திய மருத்துவ கவுன்சிலும், பாரத் பயோடெக் நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசி ‘கோவாக்சின்’ உருவாக்கியுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதிக்கும்படி சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள் மத்திய அரசிடம் விண்ணப்பித்தது.
இது தொடர்பாக மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு நேற்று (ஜனவரி 01) கூடி ஆலோசனை நடத்தியது. அந்த ஆலோசனையில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதி வழங்க நிபுணர் குழு நேற்று பரிந்துரை வழங்கியது.
இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம் தாக்கல் செய்திருந்த விண்ணப்பம் தொடர்பாக நிபுணர் குழு இன்று (ஜனவரி 02) ஆலோசனை நடத்தியது. அந்த ஆலோசனையில், கட்டுப்பாடுகளுடனான எமர்ஜென்சி பயன்பாட்டுக்கு கோவாக்சினை பயன்படுத்த மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்புக்கு (CDSCO) நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
நிபுணர் குழு வழங்கியுள்ள பரிந்துரையின் அடிப்படையில், கோவாக்சின் தடுப்பூசிக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு இன்னும் ஒரிரு நாட்களில் அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் இரண்டு தடுப்பூசிகளும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் (DCGI) இறுதி ஒப்புதலை பெற அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கோவிஷீல்டு தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக உள்ளதாகவும், பல்வேறு தடுப்பூசிகளை தயார் நிலையில் வைத்திருக்கும் ஒரே நாடு இந்தியா தான் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
சீரம் நிறுவனத்தின் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி பயன்படுத்த நிபுணர் குழு பரிந்துரை