பாஜக நடத்துவது வேல் யாத்திரை அல்ல; அரசியல் யாத்திரை என தமிழக டிஜிபி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்த நிலையில், யாத்திரைக்கு தடை வழங்ககூடாது என்ற பாஜகவின் கோரிக்கையை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
நவம்பர் 6ம் தேதி முதல் டிசம்பர் 6ம் தேதி வரை தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்தபோவதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிவித்தார். இதனையடுத்து பாஜக நடத்த திட்டமிட்ட வேல் யாத்திரைக்கு தடை கோரிய வழக்கில் அனுமதி தர முடியாது என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இருப்பினும் தடையை மீறி, முருகன் தலைமையில் திருத்தணியில் யாத்திரை சென்று கைதும் ஆனார்கள். பின்னர் வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்த தமிழக டிஜிபி உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக மனு தாக்கல் செய்தது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. இதில் வேல் யாத்திரை சம்பந்தமாக முழு அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிடப்பட்டது.
இது தொடர்பான வழக்கில் தமிழக டிஜிபி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், வேல் யாத்திரையின் போது பாஜகவினர் முகக்கவசம் அணிவது இல்லை. தனி மனித இடைவெளி பின்பற்றப்படவில்லை.
வேல் யாத்திரையால் சாலையில் செல்லும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். 10 வாகனங்களில் 30 பேர் செல்வதாக பாஜக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை, பல இடங்களி பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள், காவல்துறை ஊழியர்களிடம் தவறாக நடந்து கொண்டு, அவர்கள் கடமையாற்றுவதைத் தடுத்துள்ளனர்.
பாஜக கட்சி உறுப்பினர்கள் பங்கேற்ற இந்த யாத்திரையின் போது, கார்கள் 10 கி.மீ வேகத்தில் சென்றன, அதில் ஒரு காரில் பாஜக மாநில தலைவர் முருகன் நின்று கொண்டு கைகளை அசைத்தும், கட்சி கொடிகளை வைத்து கொண்டும் செல்கிறார்.
இது கோவிலுக்கான யாத்திரை இல்லை, இது அரசியல் யாத்திரை. மேலும், ஒரு கட்சி சட்டத்தை தனது கைகளில் எடுத்துக்கொள்கிறது ஆனால், அவர்களால் சட்டத்தை மீற முடியாது என்று தெரிவித்ததுடன், அதற்கான ஆதாரங்களாக வீடியோ காட்சிகளும் டிஜிபி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து கோயில்களில் வழிபாடு நடத்த அனுமதி வழங்கியபோதும், நவம்பர் 30 வரை யாத்திரை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், “தமிழக அரசின் அனுமதி இல்லாத நிலையில் வேல் யாத்திரை சென்றது எப்படி? அனுமதி கிடைக்கும் வரை காத்திருக்காமல் வேல் யாத்திரை நடத்தியது ஏன்? என சரமாரியாக கேள்வி எழுப்பியதுடன்,
வேல் யாத்திரைக்கு அனுமதி கோரும் பாஜக மனு மீதான காவல்துறையின் முடிவில் தலையிட முடியாது என்று கூறி, வேல் யாத்திரைக்கு தடை வழங்ககூடாது என்று பாஜக தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து வழக்கை டிசம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
கோயில்களே இல்லாத வழியில் வேல் யாத்திரை செல்வது ஏன்; நீதிமன்றம் கிடுக்குபிடி