புல்லி பாய் செயலி சர்ச்சையில் 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது சல்லி டீல் செயலியை உருவாக்கிய மாணவரை மத்தியப் பிரதேசம் இந்தூரில் டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 1 ஆம் தேதி ஆன்லைன் தளமான ‘புல்லி பாய்’ எனும் செயலியில் பெண் பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், இஸ்லாமிய பெண் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, அவர்களை ஏலம் விடுவதாகவும் விளம்பரப்படுத்தப்பட்டது.
இதற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து எம்.பி.பிரியங்கா சதுர்வேதி மும்பை காவல்துறையில் புகார் அளித்தார். மேலும் டிவிட்டரில் ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை டேக் செய்திருந்தார்.
அதேபோல் டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண் பத்திரிகையாளர் தன்னுடைய புகைப்படத்தை மாற்றம் செய்து தவறான முறையில் செயலியில் பதிவிட்டுள்ளதாகக் கூறி உரிய ஆதாரங்களுடன் டெல்லி காவல்துறையில் புகார் செய்தார்.
இந்த வழக்கில் மும்பை, டெல்லி காவல்துறையினர் தனித்தனியாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த வழக்கில் பெங்களூருவைச் சேர்ந்த 21 வயது மாணவர் மயங்க் ராவல், 19 வயதான ஸ்வேதா சிங் என்ற மாணவி, பொறியியல் மாணவர் விஷால் குமார் ஜா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவருக்கும் மும்பை நீதிமன்றம் ஜனவரி 14 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும் புல்லி பாய் செயலியை உருவாக்கிய மாஸ்டர் மைண்ட் அசாமைச் சேர்ந்த நீரஜ் பிஸ்னோய் அசாமில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் முக்கியத் திருப்பமாக பெண்களை ஏலம் விடப் பயன்படுத்திய சல்லி டீல் செயலியை வடிவமைத்தவர் குறித்து முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.
இதனையடுத்து மத்தியப் பிரதேசம் இந்தூருக்கு விரைந்த டெல்லி காவல்துறையினர், பிசிஏ முடித்துவிட்டு ஐபிஎஸ் அகாடமியில் சேர்ந்து படித்து வரும் அம்கரேஸ்வரர் தாக்கூர் (வயது 21) என்ற மாணவரைக் கைது செய்தனர். இவர் தான் சல்லி டீல் செயலியை உருவாக்கிய மாஸ்டர் மைண்ட் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து டெல்லி காவல் ஆணையர் கேபிஎஸ் மல்ஹோத்ரா கூறுகையில், “:முதல்கட்ட விசாரணையில் டிவிட்டர் மூலம் நண்பர்கள் இணைந்து செயலியை உருவாக்கி, முஸ்லிம் பெண்களின் புகைப்படங்களைப் பதிவிடலாம் என்று முடிவு செய்தனர்.
இதற்காக ஹிட் ஹப் என்ற தளத்தைப் பயன்படுத்தி, டிவிட்டர் மூலம் தங்களின் செயலியை அனைவருக்கும் பகிர்ந்து முஸ்லிம் பெண்களின் புகைப்படங்களைப் பதிவிட்டு அவமானப்படுத்தியுள்ளனர். இதன்படி, சல்லி டீல் செயலியை உருவாக்கிய இந்தூரைச் சேர்ந்த அம்கரேஸ்வரர் தாக்கூர் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர் பிசிஏ முடித்துவிட்டு ஐபிஎஸ் அகாடமியில் சேர்ந்து படித்து வருகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.