வடக்கு ஹாலந்து கடலோரங்களில் இருந்து சமீப நாட்களில், இறந்த நிலையில் சுமார் 20,000 வட துருவ கடற்பறவைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நெதர்லாந்தில் இருந்து வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
நெதர்லாந்து கடேலோரம் நெடுக சுமார் 20,000 வட துருவ கடற்பறவைகள் சமீப வாரங்களில் இறந்துள்ள மர்மம் தொடர்பாக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
 
கடந்த ஜனவரி மாதம் புயலில் சிக்கிய பனாமா நாட்டு கொடியோடு பயணித்த கப்பலில் இருந்து சுமார் 345 கொள்கலன்கள் கடலில் விழுந்ததால் இது நிகழ்ந்திருக்க கூடுமா என்று நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
 
எம்.எஸ்.சி சோயி என்ற இந்த கப்பலில் இருந்து கொள்கலன்கள் விழுந்த சில மணிநேரங்களில், அதில் இருந்த குழந்தைகளின் பொம்மைகள், மரச் சாமான்கள் மற்றும் தொலைக்காட்சி பெட்டிகள் கடலோரத்திற்கு அடித்து வரப்பட்டன.
 
பாராஃப்பின், பிளாஸ்டிக்குகள் மற்றும் பாலீஸ்டைரின் உள்பட மேசமான பொருட்கள் இந்த கொள்கலன்கள் சிலவற்றில் இருந்ததாக நம்பப்படுகிறது.
 
ஊகத்தின் அடிப்படையில் இறந்த கடற்பறவைகளின் எண்ணிக்கை சுமார் 20,000 என கணிக்கப்படுகிறது என்று கடற்பறவை நிபுணர் மர்டிக் லியோபோல்டு தெரிவித்தார்.
 
நெதர்லாந்தில் 300 கிலோமீட்டர் தொலைவுடைய கடற்கரையில் ஒரு நாளைக்கு ஒரு கிலோமீட்டரில் இருக்கும் பறவையின் விகிதத்தின் அடிப்படையில் இந்த இறந்த பறவைகளின் எண்ணிக்கை தெரிவிக்கப்படுகிறது.
 
”இங்கு 10,000 பறவைகள் உள்ளன. இதே போன்ற எண்ணிக்கையில் பறவைகள் கடலில் இருக்கலாம்,” என்று அவர் தெரிவித்தார்.
 
கொள்கலன் கடலில் விழுந்த பின்னர், அதன் கழிவால் பறவைகள் இறந்திருக்கலாம். மோசமான வானிலையும் இந்த பறவைகளுக்கு உணவு கிடைப்பதை தடுத்திருக்கலாம்.
 
அதிக கழிவுகள் வெளியேற டெர்ச்செல்லிங் தீவின் கடலோரத்தில் பாராஃபீனும் கரை ஒதுங்கியிருந்தன.
 

படம் : நன்றி அல்பெர்ட் வெஸ்டர்

முன்னர் நம்பப்பட்டதைவிட 54 கொள்கலன்கள் அதிகமாக குறைந்தது 345 கொள்கலன்கள் கப்பலில் இருந்து கடலுக்குள் விழுந்துள்ளதாக புதன்கிழமை நெதர்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
இவ்வளவு அதிக பறவைகள் இறந்துள்ளதாற்கு காரணத்தை அறிய 100 பறவைகளின் உடற்கூறு ஆய்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இன்னும் வாழ்ந்து வருகின்ற டஜன் கணக்கான பறவைகள் நோயுற்றும், மெலிந்தும், மிகவும் பலவீனமாகவும் இருப்பதால் கடலோரத்திலுள்ள சரணாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
 
பல மையங்களில் வைத்து பராமரிக்கப்படும் இவை மிகவும் பலவீனமாக இருப்பதால், குழாய் மூலம் உணவு வழங்கப்படுகிறது.
 
நெதர்லாந்தின் வடக்கிலுள்ள உரிடெப்பில் 11 கடற்பறவைகள் மீண்டும் நல்ல உடல் நலம் பெற்றுள்ளன.
 
இந்த பறவைகள் இரைப்பைகளில் பிரச்சனைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டாலும், கொள்கலன் கழிவுகள்தான் இதற்கு காரணம் என்று கூறுவதற்கு இன்னும் காலம் கனியவில்லை என்று கூறப்படுகிறது.
 
உயிர் தப்பியுள்ள இந்த பறவைகள் தங்களின் உடல் நலத்தை மீட்டெடுக்க இன்னும் நீண்டகாலம் ஆகும் என்றாலும், அவற்றால் மீண்டும் கடலுக்கு திரும்ப முடியும் என்று இவற்றை பராமரிக்கும் மையங்கள் நம்புகின்றன.