பதஞ்சலியின் கொரோனில் மருந்து குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு (IMA) வலியுறுத்தி உள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், கடந்த ஜூன் 23 ஆம் தேதியன்று ‘கொரோனில் ஸ்வாசரி’ என்ற மருந்தை அறிமுகப்படுத்தியது. இம்மருந்து கொரோனா வைரஸை குணப்படுத்தும் சக்தி கொண்டது எனவும் பகிரங்கமாக விளம்பரப்படுத்தியது.
இம்மருந்தை ஏழு நாட்கள் சோதனை செய்ததில், இம்மருந்தை எடுத்துக் கொண்ட அத்தனை கொரோனா நோயாளிகளும் 100% குணமடைந்துவிட்டதாகவும் பதஞ்சலி நிறுவனம் தெரிவித்தது. அப்போது மருந்துக்கான அறிவியல் ஆதாரங்கள் மீது மருத்துவர்களும்,சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பினர்.
ஆனால், பாபா ராம்தேவ் இவர்களின் கேள்விகளுக்கான அறிவியல் ஆதாரங்கள் எதையும் சமர்ப்பிக்கவில்லை. எதிர்ப்புகள் வலுத்ததை அடுத்து, ஆயுஷ் அமைச்சகம் கொரோனில் மருந்திற்கு ஒப்புதல் கொடுப்பதை நிறுத்தியது. இருப்பினும், கொரோனில் மருந்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் என பதஞ்சலி நிறுவனத்தின் மருந்திற்காகத் துணை நின்றது.
பாபா ராம்தேவின் பதஞ்சலி சளி, காய்ச்சல் மருந்துக்கே அனுமதி பெற்றது; கொரோனாவுக்கு அல்ல..
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி பாபா ராம்தேவ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் பதஞ்சலியின் கொரோனில் மருந்தை மீண்டும் அறிமுகப்படுத்தினர். இது முன்பு வெளியிடப்பட்ட கொரோனில் மருந்தின் மேம்படுத்தப்பட்ட ஒன்று என்று விளம்பரப்படுத்தப்பட்டது.
மேலும், இந்த மருந்து குறித்து பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், கொரோனில் மருந்து உலக சுகாதார அமைப்பின் தர சான்றிதழ் திட்டத்தின் கீழ் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தால் ஒப்புதல் பெறப்பட்ட ஒன்று என்று தெரிவித்திருந்தது.
இதற்கு கொரோனா சிகிச்சைக்கான எந்தவொரு பாரம்பரிய மருத்துவத்தின் செயல்திறனையும் உலக சுகாதார அமைப்பு மதிப்பாய்வு செய்யவோ சான்றளிக்கவோ இல்லை என உலக சுகாதார அமைப்பின் மத்திய மருந்துக் கட்டுப்பாடு பிரிவு தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பதஞ்சலி நிறுவனத்தின் தரம் நிரூபிக்கப்படாத கொரோனில் மருந்திற்கு இந்திய மருத்துவ கூட்டமைப்பு (Indian Medical Association) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து IMA வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பதஞ்சலி தயாரித்த மருந்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதா? அப்படி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தால், எத்தனை பேருக்கு ஆய்வு செய்யப்பட்டது? ஆய்வின் முடிவு என்ன? ஆய்வு குறித்து எந்த நிறுவனம் இவர்களுக்கு சான்று வழங்கியது?
ஒரு நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாத ஒரு மருந்தை கொரோனாவிற்கு எதிரான துணைச் சிகிச்சை மருந்தாகப் பயன்படுத்தலாம் என்று எப்படி தவறாகப் பரிந்துரைக்கலாம்?
[su_image_carousel source=”media: 22449,22450″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]
இட்டுக்கட்டப்பட்ட ஒரு மருந்தை இந்திய மக்கள் மீது திணிப்பதா? ஒரு பொருள் நேர்மையானதா, நல்லதா என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாத போது அதை பயன்படுத்த அனுமதியளிப்பது அறம் தானா?
அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத ஒரு பொருளை, மருந்து என்று கூறி போலியாக உலவவிடும் நபர்களுக்கு ஆதரவாக செயல்பட்டது ஏன்?
நாட்டு மக்கள் அனைவரும் இந்த மருந்தை பற்றி தெரிந்துகொள்ளும் வண்ணம் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், தார்மீக அடிப்படையில் நாட்டு மக்களுக்கு தாமாக முன்வந்து விளக்கமளிக்க வேண்டும்.,
இந்த கொரோனில் மருந்து கொரோனா தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றும் என்றால், எதற்காக 35000 கோடி ரூபாய் செலவில் தடுப்பு மருந்துக்கு செலவு செய்தீர்கள்,
கார்ப்பரேட் நிறுவனத்தின் தரம் நிரூபிக்கப்படாத மருந்தை மார்க்கெட் லாபம் என்ற பெயரில் விற்பனை செய்யலாமா? பதஞ்சலியின் கொரோனில் மருந்து குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பதில் அளிக்க வேண்டும் என இந்திய மருத்துவ கூட்டமைப்பு (IMA) தனது அறிக்கையில் வலியுறுத்தி உள்ளது.
பதஞ்சலியின் கொரோனில் மருந்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை: உலக சுகாதார அமைப்பு