பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனில் மருந்திற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்ததாகத் தகவல் பரவிய நிலையில், இதற்கு உலக சுகாதார அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் உச்சத்திலிருந்த கடந்த ஜூன் மாதம் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் ‘கொரோனில்’ என்ற ஆயுர்வேத மருந்தை அறிமுகம் செய்தது. இந்த மருந்து அறியவில் பூர்வமாகவே உருவாக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனாவை குணப்படுத்தும் என்றும் பாபா ராம்தேவ் கூறியிருந்தார்.

இருப்பினும், அறிவியல் ஆதாரங்களை எதையும் பதஞ்சலி நிறுவனம் சமர்ப்பிக்காதது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது. அதன் பின்னர் ஆயூஷ் அமைச்சகமும் இந்த மருந்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறியது. இதனையடுத்து பதஞ்சலி நிறுவனம் கொரோனில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கக் கூடியது என்று மட்டும் விளம்பரப்படுத்தியது.

100% கொரோனாவை குணப்படுத்தும் மருந்து.. அந்தர் பல்டி அடித்த பதஞ்சலி

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி பதஞ்சலி நிறுவனம் ‘கொரோனில் கிட்’ என்ற மருந்தை வெளியிட்டது. இது முன்பு வெளியிடப்பட்ட கொரோனானில் மருந்தின் மேம்படுத்தப்பட்ட ஒன்று என்று விளம்பரப்படுத்தப்பட்டது. இந்த விழாவில் பாபா ராம்தேவ் மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ் வர்தன், நிதின் கட்கரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அப்போது பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “கொரோனில் கிட் மருந்திற்கு உலக சுகாதார அமைப்பின் தர சான்றிதழ் திட்டத்தின் கீழ் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தால் ஒப்புதல் பெறப்பட்ட ஒன்று” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா சிகிச்சைக்கு கொரோனில் கிட் மருந்திற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது,

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு தனது ட்விட்டரில், “கொரோனா சிகிச்சைக்கு எந்தவொரு பாரம்பரிய மருத்துவத்தின் செயல்திறனையும் உலக சுகாதார அமைப்பு மதிப்பாய்வு செய்யவோ ஒப்புதல் அளிக்கவோ இல்லை” என்று பதிவிட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து பதஞ்சலி நிறுவனமும் இது குறித்து விளக்கமளித்துள்ளது. அந்நிறுவனத்தின் சிஇஓ ஆச்சார்யா பால்கிருஷ்ணா தனது ட்விட்டரில், “கொரோனிலுக்கு மத்திய அரசின் டிசிஜிஐ தான் ஒப்புதல் வழங்கியுள்ளது. எங்கள் மருந்தை உலக சுகாதார அமைப்பு அங்கீகரிக்கவில்லை” என்று ட்வீட் செய்துள்ளார்.

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு: நடிகர் சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை எப்படி.. உயர்நீதிமன்றம்