திரையரங்குக்குள் வெளியில் இருந்து உணவு, குடிநீர் எடுத்து செல்ல அனுமதி இல்லை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் உணவு மற்றும் குடிநீர் கொண்டு செல்ல அனுமதி இல்லாத நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வெளி உணவுகளைத் திரையரங்குகளுக்கு எடுத்துச்செல்ல மகாராஷ்டிராவில், மாநில அரசு அனுமதியளித்துள்ளது.
 
இதனையடுத்து தமிழகத்தில் உள்ள திரையரங்குகளிலும் உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்களை அனுமதிக்க உத்தரவிடுமாறு சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது.
 
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் தாக்கல் செய்த மனுவில், திரையரங்களுக்கு வெளி உணவுகளை எடுத்து செல்வதை எந்த சட்டமும் தடை செய்யாத நிலையில், வீட்டில் இருந்து உணவுப்பொருட்களை தடுப்பது மனித உரிமை மீறிய செயல் என குறிப்பிட்டுள்ளார்.
 
தியேட்டர்களில் விற்கப்படும், உணவு பொருட்களை, மருத்துவ காரணங்களுக்காக சாப்பிட முடியாத முதியோர் உட்பட பலர், வீட்டில் இருந்து உணவு பொருள் எடுத்து வர அனுமதி மறுக்கப்படுவதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். என குறிப்பிட்டிருந்தார்.
 
இந்த வழக்கு கடந்த சில நாட்களாக நடைபெற்ற நிலையில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மனுவை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அமர்வு, திரையரங்கங்கள் என்பது தனியார் நிறுவனம் என்பதால் அங்கு வெளியில் இருந்து உணவு பொருட்களை எடுத்து செல்வதற்கு அனுமதி கேட்க எந்த சட்டத்திலும் உரிமை வழங்கப்படவில்லை என்றனர்.
 
எனவே இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக் கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.