பிரதமர் மோடி பாதுகாப்பு விவகாரம் தொடர்பான பிரச்னையில் ஒன்றிய அரசு முன்னுக்குப் பின் முரணாக செயல்படுவதாக கூறியுள்ள உச்ச நீதிமன்றம், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி வருகிறார்.
கடந்த 5 ஆம் தேதி பஞ்சாபில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று நலத்திட்டங்களை வழங்க பிரதமர் மோடி திட்டமிட்டிருந்தார். பஞ்சாப் மாநிலம் ஹுசைனி வாலாவில் இருந்து 30 கி.மீ தூரத்தில் பிரதமர் மோடி வாகனம் சென்றுக் கொண்டிருந்தபோது, பிரதமர் மோடிக்கு எதிராக விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர்.
இதனால் பிரதமர் செல்லும் வாகனம் 20 நிமிடங்கள் வரை சாலையிலேயே காத்திருந்தது. பின்னர் பஞ்சாப் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு பிரதமர் மோடி மீண்டும் டெல்லி திரும்பினார். இது பாஜகவினரிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனையடுத்து பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடி சென்றபோது பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதாக சர்ச்சை எழுந்தது. மற்றொருபுறம் மோடி பங்கேற்கும் கூட்டத்திற்கு 7000 பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு இருக்கைகள் போடப்பட்டிருந்தன. ஆனால் 700 பேர் மட்டுமே வந்ததால் பிரதமர் மோடி பயணத்தை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பியதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு குறைபாடு குறித்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமனா தலைமையிலான நீதிபதிகள் சூர்ய காந்த், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது,
பிரதமரின் பயணத்திட்ட விவரங்களை சேகரித்து பத்திரப்படுத்தி வைக்கப்பட வேண்டும் என பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அதற்கு ஒன்றிய மற்றும் மாநில அரசின் விசாரணை குழு முழு ஒத்துழைப்பு நல்கவேண்டும் எனக் கூறி விசாரணையை ஜனவரி 10 ஆம் தேதி
ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், வழக்கு இன்று (10.1.2022) விசாரணைக்கு வந்தபோது, ஒன்றிய அரசு அரசியல் காரணங்களுக்காக ஒரு சார்பாக செயல்படுகிறது. ஒன்றிய அரசு துறைகளின் விசாரணையால் எந்த நியாமும் கிடைக்காது என பஞ்சாப் மாநில அரசு தரப்பில் வாதிடப்பட்டிருக்கிறது.
மேலும் முறையான விசாரணை எதுவும் நடத்தாமலேயே ஒன்றிய அரசு மாநில அதிகாரிகளுக்கு எதிராக ஏன் துறை நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று தலைமை செயலாளர், டி.ஜி.பி உள்ளிட்டோருக்கு 7 நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எந்த விசாரணையும் நடத்தாமல் துறை நடவடிக்கை என்ற முடிவுக்கு ஒன்றிய அரசு எப்படி வந்தது?
எனவே, ஒன்றிய அரசு விசாரணை அமைப்புகளின் மீது நம்பிக்கை இல்லை. உச்ச நீதிமன்றம் சுதந்திரமான விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட வேண்டும் என்று பஞ்சாப் மாநில அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.
இதனைத்தொடர்ந்து வாதிட்ட ஒன்றிய அரசின் சோலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 100 மீட்டர் தூரத்தில் எப்படி போராட்டக்காரர்கள் வந்தார்கள். இது மாநில அரசின் உளவுத்துறையின் நுண்ணறிவு குறைபாடு என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பிவிட்டு எதற்கு நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று கடந்த முறை கேட்டீர்கள்? நோட்டீஸ் அனுப்பியது முன்னுக்குப்பின் முரணாக உள்ளது என்று ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரலிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் விசாரணை குழுவுக்கு தடை விதித்து, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்றும், அக்குழுவில், பஞ்சாப் டிஜிபி, தேசிய புலனாய்வு முகமை ஐ.ஜி, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற பதிவாளர் ஆகியோர் இடம் பெறுவார்கள். இந்த குழு மிக விரைவாக விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டுள்ளனர்.