பிரதமர் மோடி தான் பதவியேற்றதில் இருந்து இதுவரையில் 92 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இதற்கான விமானச் செலவு ரூ.2,021 கோடியாகும்.
 
பிரதமர் மோடி, கடந்த 2014ம் ஆண்டு மே 26ம் தேதி பதவியேற்றார். இதுவரையில், அதாவது 55 மாதங்களாக அவர் இப்பதவியில் உள்ளார். இன்னும் 7 மாதங்கள் அவரது பதவிக்காலம் உள்ளது. அவர் தன்னுடைய  பதவிக்காலத்தில் 92 நாடுகளுக்கு சென்று வந்துள்ளார்.
 
இதற்கு முன்பு, 10 ஆண்டுகளாக பிரதமர் பதவியில் இருந்த மன்மோகன் சிங் 93 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தனது மீதமுள்ள பதவிக்காலத்தில் பிரதமர்  மோடி, மன்மோகன் சிங்கை முந்திவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மோடி 5 ஆண்டு பதவிக்காலத்திலேயே இந்த சாதனையை முறியடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மோடியின் வெளிநாட்டு பயணச் செலவாக ரூ.2,021 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால், மன்மோகன் சிங்கின் 50 வெளிநாட்டு பயணங்களுக்கு ரூ.1,350 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.
 
பிரதமர்களின் வெளிநாட்டு பயணங்கள் குறித்த கேள்வி ஒன்றுக்கு நாடாளுமன்றத்தில் வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் அளித்த பதிலில், ‘‘பிரதமர் மோடி பதவியேற்றதில் இருந்து 55 வெளிநாடுகளுக்கு   சென்றுள்ளார். இதில் சில நாடுகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை பயணித்துள்ளார். இதன் மொத்த நாடுகள் எண்ணிக்கை 92. இந்த பயணத்துக்காக ரூ.2,021 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. ’ என்றார். 
 
ஒரு பிரதமர் அதுவும் குறுகிய காலத்தில் அதிக நாடுகளுக்கு அதுவும் சென்ற நாடுகளுக்கே மறுபடி மறுபடியும் சென்ற ஒரே பிரதமர் மோடி மட்டுமே..
 
நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு பிரதமராக 16 ஆண்டுகளில்  68 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். 
 
முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி 15 ஆண்டுகளுக்கு  பிரதமராக நீடித்த  மூன்று கால கட்டங்களில் 115  நாடுகளுக்கு  பயணம் செய்துள்ளார்.
 
வாஜ்பாய் 6 ஆண்டுகளில் 48 நாடுகளுக்கு பயணம் மட்டுமே மேற்கொண்டு உள்ளார். நாட்டின் 5வது பிரதமரான சவுத்ரி சரண்சிங்  மட்டுமே  வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளாத ஒரே பிரதமர்.