மதுரையில் குடுகுடுப்பை சமூகத்தைச் சேர்ந்த மாணவி தெய்வானை, 12ஆம் வகுப்பு தேர்வில் அவர் பயின்ற அரசு பள்ளியில் முதலிடத்தை பெற்று சாதித்துள்ளதால், மாணவியின் கல்லூரி படிப்பு செலவை ஏற்றுக்கொண்டுள்ளார் திருப்பரங்குன்றம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணன்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் குடுகுடுப்பை வைத்து குறி சொல்லும் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் வசிக்காமல் பயணம் செய்து தொழில் செய்யும் நாடோடி சமூகமாக உள்ளனர்.
குறி சொல்லும் தன் பெற்றோரோடு பல ஊர்களுக்குச் சென்றுவந்த கணேசன்-லட்சுமி தம்பதியின் மகள் தெய்வானை, கடுமையான வறுமை, பட்டினி, மின்சாரம் இல்லாத வீட்டுச் சூழல் ஆகியவற்றைத் தாண்டி, இன்று படிப்பில் சாதித்துள்ளார். திருப்பரங்குன்றம் அரசு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார்.
இதுகுறித்து மாணவி தெய்வானை கூறுகையில், “என் சமூகத்தில் பெண்கள் பள்ளிப்படிப்பை முடிப்பது அரிதுதான். நான் ஒரு தொடக்கமாக இருக்க விரும்புகிறேன். நான் பி.காம் படிக்கப்போகிறேன். வங்கியில் வேலை செய்வது என் கனவு. என் சமூக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவேண்டும்.
எங்கள் வசிப்பிடத்தில், ஒரு கூட்டமாக நாங்கள் வாழ்கிறோம். நாங்கள் தற்காலிக குடில் அமைத்து வசிப்பதால், மின்சார வசதி கிடையாது. ஆனால் தேர்வுகளில் முதல் மதிப்பெண் வாங்கவேண்டும் என்ற உறுதி இருந்தது. குலத்தொழிலுக்காகப் பெற்றோருடன் பல இடங்களுக்குச் சென்றாலும், கல்வியை தொடர்வதில் அக்கறையோடு இருந்ததால் வென்றேன்.
நேர்மையாக உழைத்து வாழவேண்டும் என்பதுதான் என் சமூகத்திடம் நான் கற்றுக்கொண்ட பாடம். குறி சொல்லுவதில் எங்களுக்கு கிடைக்கும் வருமானம் சொற்பம்தான். அதனால் பசியின் வலி தெரியும். பல ஊர்களுக்கு பசியோடு நடந்து சென்றிருக்கிறேன். நான் படிக்கும் படிப்பு என்னை முன்னேற்றும் என்ற நம்பிக்கையில் படித்தேன்” என்று நம்பிக்கையோடு கூறுகிறார் மாணவி தெய்வானை.
தெய்வானையின் தேர்ச்சி குறித்து அறிந்த திருப்பரங்குன்றம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணன், தெய்வானை போன்ற பெண் குழந்தைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதற்காக, மாணவியின் கல்லூரி படிப்பு செலவை ஏற்றுக்கொள்கிறேன். மேலும் பலர் உதவி செய்ய, அந்த மாணவியின் பெயரில் வங்கிக் கணக்கை தொடங்கி வைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க: ஊரடங்கை மீறி ரஜினி உல்லாச காரில் பவனியா… போலீஸ் விசாரணை