டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என பிசிசிஐ விராட் கோலியிடம் கேட்டுக்கொண்டதாக கங்குலி தெரிவித்திருந்த நிலையில், இதுகுறித்து தன்னிடம் யாரும் ஒருபோதும் கூறவில்லை என்று கோலி தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகிய நிலையில், அந்த அணிக்கு மூத்த வீரர் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. அந்த சுற்றுப்பயணத்தின் ஒருநாள் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டு, ரோகித் சர்மாவை கேப்டனாக அறிவித்தது பிசிசிஐ.
ஏற்கனவே டி20 கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியது தொடர்பாக பிசிசிஐ தலைவர் கங்குலி பேசும்போது, “டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் செயல்திறனைப் பொருட்படுத்தாமல், விராட் கோலி டி20 கேப்டன் பதவியை ராஜினாமா செய்திருக்காவிட்டால், ஒயிட்-பால் கேப்டனாகத் தொடர்ந்திருப்பார். அப்போது கேப்டன் பதவியை மாற்றும் திட்டம் எதுவும் எங்களிடம் இல்லை.
விராட் கோலியை டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று நாங்கள் (பிசிசிஐ) அவரிடம் கேட்டுக்கொண்டோம். தவிர, ஒருநாள் கேப்டன்சி மாற்றம் குறித்து கோலியுடம் தனிப்பட்ட முறையில் நான் பேசினேன். தேர்வாளர்களும் கோலியிடம் பேசினார்கள். ஆனால், கோலி அவர்களின் எவ்வித கருத்துக்களும் செவி சாய்க்கவில்லை” என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து விராட் கோலியிடம் கேட்டபோது, “டி20 கேப்டன் பதவியில் இருந்து நான் விலகுவதாக அறிவித்ததிலிருந்து (டிசம்பர் 8 ஆம் தேதி வரை), பிசிசிஐ உடன் எனக்கு எந்த தொடர்பு சரியாக நடக்கவில்லை. அவர்களிடம் இருந்து முறையான எந்த பதிலும் கிடைக்கவில்லை.
டெஸ்ட் அணியை தேர்வு செய்வதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு என்னை தொடர்பு கொண்டார்கள். அப்போது ஐந்து தேர்வாளர்கள், நான் ஒருநாள் அணியின் கேப்டனாக இருக்க மாட்டேன் என்று என்னிடம் சொன்னார்கள்.
ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து என்னை நீக்குவது குறித்து என்னக்கு எந்த முன்னறிவிப்பும் கொடுக்கப்படவில்லை. நானும் அதை ஏற்றுக்கொண்டேன்.
ஆனால், டி20 கேப்டன் பதவியை விட்டுக் கொடுக்க வேண்டாம் என்று என்னிடம் யாரும் ஒருபோதும் கூறவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
கங்குலி கூறிய கருத்துக்கு முற்றிலும் முரணாக விராட் கோலி பேசியது, விராட் கோலி – கங்குலிக்கு இடையே மோதல் நிலவுவதாக சர்ச்சை எழுந்து, பல்வேறு விவாதங்களுக்கும் வழிவகுத்தது. இதனையடுத்து, இதுதொடர்பாக பிசிசிஐ தலைவர் கங்குலி மௌனம் கலைக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பலரும் அறிவுறுத்தினர்.
இந்நிலையில், கொல்கத்தாவில் இதுகுறித்து கங்குலியிடம் செய்தியாளர்கள் எழுப்பியபோது, “இந்த விஷயத்தில் நான் சொல்வதற்கு எதுவும் இல்லை. இதை பிசிசிஐ முறைப்படி கையாளும்” என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவிக்கையில், “கங்குலி – கோலி இருவரும் பெரிய பதவியில் இருப்பவர்கள். அவர்கள் பொது இடங்களில் ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டி சண்டை போட்டுக்கொள்ளவது சரியல்ல. இந்த பிரச்சனையை பிறகு பார்த்து கொள்ளுங்கள். இப்போது சர்ச்சையை கிளப்பாமல் வர இருக்கும் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் கவனம் செலுத்துங்கள்” என அறிவுரை கூறியுள்ளார்.