பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துடனான தோல்வியை தொடர்ந்து, நமீபியா நிர்ணயித்த 133 ரன் இலக்கை 15.2 ஓவரில் எட்டி இந்தியா வெற்றியுடன் டி20 உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றில் இந்தியா 2-வது பிரிவில் இடம் பிடித்திருந்தது. முதல் போட்டியில் பாகிஸ்தானிடமும், 2-வது போட்டியில் நியூசிலாந்திடமும் தோல்வியடைந்ததால் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு மங்கியது.

நேற்றைய போட்டியில் நியூசிலாந்திடம் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்ததன் மூலம், அதிகாரப்பூர்வமாக இந்தியா அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

இன்று (08-11-2021) தனது கடைசி லீக் ஆட்டத்தில் நமீபியாவை எதிர்கொண்டது இந்தியா. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நமீபியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் சேர்த்தது.

இந்திய அணி சார்பில் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டும், பும்ரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் 133 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய பேட்டிங் செய்தது. கே.எல். ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ரோகித் சர்மா 37 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கே.எல். ராகுல்- ரோகித் சர்மா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.5 ஓவரில் 86 ரன்கள் குவித்தது. அடுத்து கே.எல். ராகுல் உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை வெற்றி நோககி அழைத்து சென்றது.

கே.எல். ராகுல் ஆட்டமிழக்காமல் 36 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 54 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 19 பந்தில் 4 பவுண்டரியுடன் 25 ரன்களும் எடுக்க இந்தியா 15.2 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐந்து லீக் ஆட்டங்களில் கடைசி மூன்று போட்டிகளில் வெற்றிபெற்ற மகிழ்ச்சியுடன் டி20 உலக கோப்பை தொடரில் இருந்து இந்தியா வெளியேறியது.

இந்த தொடருடன் விராட் கோலி டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதால், இந்த உலகக்கோப்பை தொடர் விராட் கோலிக்கு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டது. அவர் பதவி விலகும் போதாவது ஐசிசி கோப்பையை வென்றுக்கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நிறைவேறாமல் போனது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.