பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் கொரோனா தொற்றுக்கு முந்தைய காலங்களில் நடத்தப்பட்டது போலவே நேரடி எழுத்துத் தேர்வு மூலம் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடக்க வேண்டிய பருவத்தேர்வு கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் இணைய வழியில் நடத்தப்பட்டது.
அந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. சுமார் 1 லட்சம் மாணவர்களுக்கான முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், நன்றாக படித்த மாணவர்களுக்கு அரியர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டதால் கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர் குழப்பம் அடைந்தனர்.
இதனையடுத்து, அண்ணா பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் முறையாக நடத்தப்படவில்லை, எனவே பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும், தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதலாம் எனவும் கூறியிருந்தது.
இந்நிலையில், பொறியியல் மாணவர்களுக்கு கொரோனாவுக்கு முன்பு தேர்வுகள் நடந்ததைப் போலவே, நேரடி எழுத்துத் தேர்வு நடத்தப்படும். மேலும், நடப்பு செமஸ்டருக்கான வினாத்தாள் வடிவமைப்பு பழைய எழுத்துத்தேர்வு அடிப்படையிலேயே நடக்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அதோடு, தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பட்டியலை ஜுன் 7 ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கல்லூரிகளுக்கும், ஜுன் 12க்குள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று மாணவர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வரும் கல்வியாண்டு முதல் தமிழ் உள்பட 8 மொழிகளில் பொறியியல் பாடங்கள்- AICTE