ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘சர்கார்’ படம் ‘செங்கோல்’ கதையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என்று கூறி துணை இயக்குநர் வருண் ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து அக்டோபர் 30ம் தேதிக்குள் ‘சர்கார்’ படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கமளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதி சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வருண் ராஜேந்திரனுடன் சமரசம் ஏற்பட்டுவிட்டதாக இயக்குநர் முருகதாஸ் நீதிமன்றத்தில் விளக்கமளித்தார்.
மேலும், ‘சர்கார்’ படத்தின் கதை வருண் ராஜேந்திரனுடையது தான் எனவும், படத்தின் துவக்கத்தில் கதை நன்றி என்று குறிப்பிட்டு அவருடைய பெயர் வெளியிடப்படும் என நீதிமன்றத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் உறுதி அளித்துள்ளார்.
இதனால் படத்தின் சிக்கல் நீங்கி சர்க்கார் படம் தீபாவளியன்று திரைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, சர்கார்-செங்கோல் ஆகிய இரண்டு படத்தின் கதையும் ஒன்றாக உள்ளதாக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “சங்கத்தின் உறுப்பினரான வருண் என்ற ராஜேந்திரன் ஆகிய உங்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால், கடந்த 2007ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்த செங்கோல் என்ற கதையும், சர்கார் கதையும் ஒன்றே என்று சங்கம் தனது கருத்தை தெரிவித்துக் கொள்கிறது.
உங்கள் பக்கம் உள்ள நியாயத்திற்காக நீங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வதை நாங்கள் தடை செய்ய மாட்டோம். இந்த சர்ச்சையில் உங்களுக்கு உதவ முடியாமைக்கு வருந்துகிறோம்” என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் படத்திற்கு வசனம் எழுதிய எழுத்தாளா் ஜெயமோகன் கடந்த ஞாயிற்றுக் கிழமை சேலத்தில் நடைபெற்ற இலக்கிய விழா ஒன்றில் கலந்து கொண்டாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், சா்காா் படத்தின் கதை திருடப்பட்டது கிடையாது. கள்ள ஓட்டு போடுதல் என்ற ஒற்றை வாா்த்தையை மையமாக கொண்டு, கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலை கொண்டு சா்காா் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்பு செய்திக்கு: சர்கார் படத்தின் வழக்கும், படம் வெளியீடு தேதி அறிவிப்பும்