பட்டாசு வெடிப்பதற்கான நேரம் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கடந்த 23-ஆம் தேதி அளித்த தீர்ப்பு தொடர்பாக விளக்கம் கோரி தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு மீது இன்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 30) விசாரணை நடைபெறவுள்ளது.

பட்டாசு வெடிப்பதற்கான விவகாரத்தில் அக்டோபர் 23-இல் உச்சநீதிமன்றம் அளித்த இறுதி தீர்ப்பில், தீபாவளி, பிற விழாக் காலங்களில், நாடு முழுவதும் பட்டாசு வெடிப்பதற்கு இரவு 8 -10 மணி வரையிலும், கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகியவற்றின் போது நள்ளிரவு 11.55-12.30 மணி வரையிலும் அனுமதி அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த தீர்ப்பு தொடர்பாக தமிழக அரசு சார்பில் வழக்குரைஞர் பி. வினோத் கன்னா விளக்கம் கோரும் மனுவை உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்தார். அதில், பல்வேறு பாரம்பரியங்களையும், பண்பாடுகளையும் கொண்ட இந்தியா, கூட்டாட்சி நாடாக உள்ளது. தீபாவளியைப் பொருத்தவரையிலும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனிப்பட்ட நம்பிக்கைகள், பாரம்பரியங்கள், பண்பாடுகள் உள்ளன. வட இந்தியாவில் தீபாவளிப் பண்டிகை இரவிலும், தமிழகத்தில் அதிகாலையிலும் கொண்டாடப்படுகிறது.

தீபாவளி தினத்தில் தமிழகத்தில் மக்கள் அதிகாலை 4 மணிக்கு எழுந்து, எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடைகள் அணிந்து, பட்டாசுகளை வெடித்து தீபாவளியை அதிகாலையிலேயே கொண்டாடத் தொடங்குகின்றனர். தமிழகத்தில் தீபாவளி கொண்டாட்டம் நாள் முழுவதும் இருக்கும்.

இந்நிலையில், நாடு முழுவதும் பட்டாசு வெடிப்பதற்கு இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டும் என விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டால் பட்டாசு வெடிக்கும் உரிமையை தமிழக மக்கள் இழந்துள்ளனர். மேலும், இந்தக் கட்டுப்பாடு ஓரே நேரத்தில் அதிக அளவில் புகை உருவாக வழி வகுக்கும். எனவே, தமிழகத்தில் அதிகாலை 4.30-6.30 மணி வரையிலும், இரவு 8-10 மணி வரையிலும் இரண்டு வெவ்வேறு நேரங்களில் பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக பட்டாசு உற்பத்தியாளர்கள் சார்பிலும் விளக்கம் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 30) விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் முடிவில், காற்று மாசு ஏற்படுவதை தடுக்கும் நோக்கத்தில் தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே தமிழகத்தில் பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும் வெடி வெடிக்கும் நேரத்தை தமிழக அரசே முடிவு செய்துகொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.