நாகை மாவட்டம், திருக்கடையூரில் நேற்று தி.மு.க. நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் இல்லத் திருமணத்தை தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார். திருமண விழாவில் அவர் பேசிய விவரம் வருமாறு:

தி.மு.க. ஆட்சி தமிழ்நாட்டிலே உருவாகப் போகிறது என்பது யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஏதோ ஆட்சிக்கு வந்தேதீர வேண்டும் என்பதற்காக நான் சொல்லுகிறேன் என்று எண்ணிவிடக்கூடாது. இன்றைக்கு நாட்டிலே இருக்கக்கூடிய ஆட்சியை பார்க்கிறோம்.

ஏற்கனவே, 2 தொகுதிகள் காலியாக இருக்கிறது. இப்பொழுது 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்தலாம் என்று ஐகோர்ட்டு தேர்தல் கமிஷனுக்கு அறிவுறுத்தியிருக்கிறது.இன்றைக்கு காலியாக இருக்கக்கூடிய அந்த 20 தொகுதிகளிலே தேர்தல் நடத்துங்கள் என்று நாம் சொல்லுகிறோம்.

முதல்-அமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி என்ன சொல்லுகிறார் என்று கேட்டால், தேர்தலை சந்திக்கத் தயார் என்று சொல்லுகிறார். தேர்தலை சந்திக்கத் தயார் என்று சொல்லுகிற முதல்- அமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமியைப் பார்த்துக்கேட்கிறேன். உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு கூட தைரியம் இல்லாமல் ஒரு ஆட்சியை நீங்கள் நடத்திக்கொண்டு இருக்கிறீர்கள். இதைச் சொன்னால் அவர் என்ன சொல்வார் என்று சொன்னால், ‘உள்ளாட்சித் தேர்தலை நடந்தக் கூடாது’ என்று தி.மு.க. தான் நீதிமன்றத்திற்கு சென்று தடை உத்தரவு பெற்றிருக்கிறது என்று ஒரு தவறான பிரசாரத்தை செய்து கொண்டிருக்கிறார்.

நீதிமன்றத்திற்குச் சென்றது உண்மை தான். தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தான் நீதிமன்றத்திற்குச் சென்றார். நீங்கள் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். தேர்தலை நிறுத்துங்கள் என்று நாம் நீதிமன்றத்திற்கு செல்லவில்லை. தேர்தலை முறையாக நடத்துங்கள். விதிமுறைப்படி தேர்தலை நடத்துங்கள் எஸ்.சி, எஸ்.டி, பெண்கள், ஆண்கள் என்று மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கக்கூடிய நிலையில், அந்த அடிப்படையிலே முறையாக தேர்தலை நடத்துங்கள் என்று தான் நீதிமன்றத்திற்கு சென்றோம்.

அதனை முறைப்படுத்த வேண்டிய பொறுப்பில் இருப்பது யார்?. மத்தியில் இருக்கக்கூடிய டெல்லியில் இருக்கக்கூடிய தேர்தல் கமிஷன் அல்ல, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மாநில தேர்தல் ஆணையம். மாநில தேர்தல் ஆணையத்தை கண்காணித்துக் கொண்டிருப்பது யார்?.

தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கக்கூடியவர்கள். அவர்களுடைய கட்டுப்பாட்டிலே தான் இன்றைக்கு இவர்கள் இருந்துகொண்டு இருக்கிறார்கள்.

ஆகவே, அவர்களுடைய கருத்துகளின்படி தான், அவர்களுடைய யோசனையின்படி தான் இங்கு இருக்கக்கூடிய தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. தனியாக தன்னிச்சையாகத்தான் செயல்பட வேண்டும் என்பது மரபு. ஆனால், அதையும் மீறி இன்றைக்கு தமிழகத்தில் இருக்கக்கூடிய தேர்தல் ஆணையம் முறைப்படுத்தி தேர்தல் நடத்துவதற்குத் தயாராக இல்லை. அதை, முறைப்படுத்திவிட்டால் தேர்தல் நடத்துவதற்கு அவசியம் வந்துவிடும்.

இந்த தேதிக்குள், இந்த மாதத்திற்குள் தேர்தலை நடத்துவதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று பலமுறை நீதிமன்றம் உத்தரவு போட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவு போட்டதற்கு பிறகும் கூட, அதை முறைப்படுத்துவதற்கு வக்கற்ற நிலையில் இருக்கும் ஆட்சி இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது.

அண்ணா இந்த ஆட்சியை உருவாக்கிய காலத்தில் கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு என்று சொன்னார். எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு கமிஷன்-கலெக்சன்-கரப்ஷன் என்று உருவாக்கியிருக்கிறார்.

இது தான் இன்றைக்கு தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. இதுவரைக்கும் எத்தனையோ முதல்-அமைச்சர்கள் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் மீது வழக்குகள் வந்திருக்கலாம், தண்டனைகள் கூட பெற்றிருக்கலாம். அதற்கு உதாரணம் ஜெயலலிதா. ஆனால் சி.பி.ஐ. விசாரணை சந்திக்க வேண்டிய ஒரு சூழ்நிலை தமிழ்நாட்டின் வரலாற்றில் எடப்பாடி பழனிசாமிக்கு தான் வந்திருக்கிறது.

அடுத்து துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி. ஆட்சியில், அதிகாரத்தில் இருக்கிற காரணத்தால் தற்காலிகமாக நீங்கள் வெளியிலே நடமாடிக் கொண்டு இருக்கலாம். எப்போது, தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. ஆட்சி உருவாகிறதோ, அடுத்த நாள் இல்லை. அடுத்த வினாடியே அத்தனை பேரும் சிறைக்கூடத்தில் தான் இருக்கப்போகிறார்கள். இது தான் உண்மை, அவ்வளவு ஆதாரம் இருக்கிறது.

இன்றைக்கு ஏதோ சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்துக் கொண்டு அந்த எண்ணிக்கையை கூட குறையாமல் பார்த்துக் கொள்வதற்கு எவ்வளவு கோடி ரூபாய் அவர்களுக்கு கப்பம் கட்டிக்கொண்டு இருக்கிறீர்கள். எல்லா ஆதாரமும் இருக்கிறது.

குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கக்கூடிய ஆட்சிதான் இன்றைக்கு தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கக்கூடிய இந்த ஆட்சி. ஆகவே, இந்த ஆட்சியை அப்புறப்படுத்துவதற்கு உறுதியேற்கக்கூடிய, சபதம் ஏற்கக்கூடிய ஒரு சூழ்நிலை இன்றைக்கு நமக்கெல்லாம் வந்திருக்கிறது, தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.

கருத்துக் கணிப்புகளைப் பற்றிக்கூட எடுத்துச் சொன்னார்கள். கருணாநிதியை பொறுத்த வரையில் கருத்துக் கணிப்பில் என்றைக்கும் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது கிடையாது. கருத்துக் கணிப்பு பற்றி என்றைக்கும் கவலைப்பட்டது கிடையாது. அது சாதகமாக வந்தாலும் சரி, பாதகமாக வந்தாலும் சரி, அதைப் பற்றி என்றைக்கும் கவலைப்படமாட்டார்கள். ஆனால், தி.மு.க.வின் கருத்துக் கணிப்புகளை வைத்துத்தான் தலைவர் கருணாநிதி என்றைக்கும் நடைபோடுவார்.

அதே உணர்வோடு தான் அவர் வழிநின்று நான் உங்களை எல்லாம் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். கருத்துக் கணிப்புகளை எல்லாம் ஒருபக்கம் ஒதுக்கிவைத்துவிட்டு, கடமை ஆற்றுவோம். கண்ணியத்தோடு கடமை ஆற்றுவோம். தேர்தல் களத்தில் நிற்போம். எதிரிகளை தூள்தூளாக்குவோம். துரோகிகளை ஓடஓட விரட்டுவோம். ஊழல்வாதிகளை நாட்டில் இருந்து அப்புறப்படுத்துவோம். விரைவிலே இவர்களை எல்லாம் சிறைக்கூடாரத்தில் அடைக் கின்ற முயற்சியிலே நாம் நிச்சயமாக ஈடுபடுவோம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
ஆசிரியரின் தேர்வுகள்…