பேரிடர் மேலாண்மை சட்டம் 2005இன்படி, நாடு தழுவிய ஊரடங்கை மே 17ம் தேதி வரை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் நாடு முழுவதும் அதிகரித்து கொண்டே வருவதாலும், மே, ஜூன் மாதங்களில்தான் கொரோனா தொற்று பெருமளவில் இந்தியாவில் இருக்கும் என்று பல்வேறு மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருவதாலும் இந்த ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு அறிவித்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது..
இதனிடையே, கொரோனா பாதிப்பை அடிப்படையாக கொண்டு சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற மண்டலங்கள் நாடு முழுவதும் பிரிக்கப்பட்டு அது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்படும் என்றும், கொரோனா தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டலங்களில் கூடுதலாக சில தடைகள் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க: கொரோனாவை கட்டுப்படுத்தும் ரெம்டிசிவிர்.. அமெரிக்காவின் புதிய முயற்சி
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலின்படி, விமானம், ரயில், மெட்ரோ ரயில், மாநிலங்களுக்கு இடையேயான சாலை போக்குவரத்து, பள்ளி, கல்லூரி, பயிற்சி மையங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்டுகள், பொதுக்கூட்டங்கள், சினிமா தியேட்டர்கள், ஜிம்கள், ஷாப்பிங் மால்கள், கோயில்கள் உள்ளிட்டவைகள் செயல்பட அனுமதியில்லை. எனினும், உள்துறை அமைச்சகம் அனுமதித்துள்ள குறிப்பிட்ட சேவைகளுக்கான விமானம், ரயில், சாலை போக்குவரத்து இயங்க அனுமதிக்கப்படுகிறது.
இதுதவிர நாடு முழுக்க அனைத்து மண்டலங்களிலும் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மக்கள் எங்கும் வெளியே செல்ல முடியாது. மருத்துவ தேவை போன்ற மிக அவசர தேவை இருந்தால் மட்டுமே இந்த நேரத்தில் மக்கள் வெளியே செல்ல முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.