மத்திய பிரதேசத்தில் தலித் விவசாயி தனது குழந்தைகள் உட்பட குடும்பத்தையே காவல்துறையினர் தாக்கியதால், விவசாயி, அவரது மனைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சர்ச்சையாகியதையடுத்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள குணா மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ராம்குமார் அஹிர்வார். தலித் வகுப்பைச் சேர்ந்த இவர் வெகுநாட்களாக காலியாக இருந்த ஒரு இடத்தில் விவசாயம் செய்துள்ளார்.

2018 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் கூற்றுப்படி, 20 பிக்ஹாக்கள் (5.5 ஏக்கர்) நிலம் கல்லூரி கட்டுவதற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிலத்தை அஹிர்வார் மற்றும் சாவித்ரி தேவி ஆகியோர் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் பல ஆண்டுகளாக அங்கு விவசாயம் செய்து வருவதாகக் கூறினர்.

சம்பவத்தன்று காவல்துறையினருடன் வந்த மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் சேர்ந்து, தம்பதியினரை வெளியேற்றவும், அங்கு ஒரு எல்லைச் சுவரைக் கட்டவும் நிலத்தை பார்வையிட்டனர். அப்போது நிலத்தை காலி செய்ய உத்தரவிட்டுள்ளனர். சிறிது கால அவகாசம் கோரி கெஞ்சிய ராம்குமாரை அலட்சியம் செய்த காவல்துறையினர் பயிர்களை அழிக்க தொடங்கி உள்ளனர்.

இதனை தடுத்த விவசாயி ராம்குமார் மற்றும் அவர் குடும்பத்தினரை காவல்துறையினர் கண் மூடித்தனமாக தாக்கி உள்ளனர். இதனால் மனம் உடைந்த விவசாயியின் மனைவி மற்றும் விவசாயி ஆகியோர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இந்நிலையில் ராம்குமார் மற்றும் குடும்பத்தினர் தாக்கப்பட்ட வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இச்சம்பவம் வைரலானதையடுத்து, குணா மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் தலைமை அதிகாரியும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஆறு போலீஸார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஒரு உயர்மட விசாரணைக் குழுவையும் அமைத்துள்ளதாக முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் செளஹான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விவசாயி ராஜ்குமார் ஆஹிர்வார் கூறுகையில், சம்பவ நாளன்று காவல்துறை எல்லா எல்லைகளையும் கடந்துவிட்டதாகவும், தன் மனைவி, தாய் மற்றும் சகோதரருடன் தனது சிறு சிறு குழந்தைகளையும் கூட போலீஸ் தாக்கியதாக கூறியுள்ளார்.

மேலும் நாங்கள் வயலுக்கு வந்த அதிகாரிகளிடம் மிகவும் மன்றாடினோம். ஆனால், அவர்கள் நாங்கள் சொன்னதைக் கேட்க தயாராக இல்லை. அவர்கள் தரக்குறைவாகப் பேசிவிட்டு, நீ இந்த இடத்தைவிட்டுப் போகப்போகிறாயா இல்லையா என்று மிரட்டினார்கள். அதன்பிறகு, என் குடும்பத்தைத் தாக்க ஆரம்பித்தார்கள் எனக் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு ராகுல் காந்தி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உட்படப் பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: சாத்தான்குளத்தில் மீண்டும் ஒரு அவலம்.. அச்சத்தில் மக்கள்