நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளை மத்திய அரசு மதிக்கவில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் விவசாயிகள் 28வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதராகவும், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தேசிய உழவர் தினமான இன்று (டிசம்பர் 23) திருவனந்தபுரத்தில் விவசாயிகள் அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.
அப்போது பேசிய முதல்வர் பினராயி விஜயன், “தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்படும் இந்நாளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நம் நாடு பல வரலாற்று போராட்டங்களை கொண்டுள்ளது. அவற்றில் மிகப் பெரிய போராட்டமாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையிலான தேசிய விவசாயிகள் ஆணையம் (என்சிஎஃப்) சமர்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை அமல்படுத்துவதாக பாஜக கூறியது. அவ்வாறு கூறிய பாஜக தான் இப்போது நாட்டை ஆளுகிறது. ஆனால், தாங்கள் கூறியதை அமல்படுத்த முடியவில்லை.
நாடு முழுவதுமுள்ள மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளையும் விவசாயத்தையும் மத்திய பாஜக அரசு மதிக்கவில்லை” என்று மத்திய பாஜக அரசிற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.