மூத்த பத்திரிகையாளர் வினோத் துவா மீதான தேச துரோக வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று (3-6-2021) அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

மூத்த பத்திரிகையாளரான வினோத் துவா கடந்த ஆண்டு, யூடியூப் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் பிரதமர் மோடி, பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் மரணங்களை வாக்கு வங்கி அரசியலுக்குப் பயன்படுத்துவதாக மோடி குறித்து விமர்சனங்களை வினோத் துவா முன்வைத்திருந்தார்.

இதனையடுத்து வினோத் துவா அவதூறாக பேசியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இமாச்சல பிரதேசத்தின் பாஜக பிரமுகர் அஜய் ஷ்யாம் காவல்துறையில் புகார் அளித்தார். இந்த புகாரில் வினோத் துவா மீது இமாச்சல பிரதேச காவல்துறையினர் தேசதுரோக வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வினோத் துவா உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். உச்சநீதிமன்ற நீதிபதிகள் யு.யு. லலித், வினீத் சரண் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இவ்வழக்கில் வினோத் துவாவை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்து, கடந்த அக்டோபர் மாதம் இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று (3-06-2021) இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வினோத் துவா மீதான தேச துரோக வழக்கை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும் அரசுகள் மீதான விமர்சனங்களே தேசவிரோத குற்றங்கள் ஆகாது என்ற கேதார்நாத் சிங் வழக்கின் தீர்ப்பு அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் பொருந்தும் என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

முன்னதாக 1962 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கேதார்நாத் சிங் வழக்கில் வழங்கிய தீர்ப்பில், தேசத்துக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையிலான விமர்சனங்கள், வன்முறைக்கு ஆதரவு தெரிவிக்கும் கருத்துகள் ஆகியவை தான் தேச துரோக சட்டத்தின் கீழ் வரும். அப்படி எதுவும் இல்லாதவை தேச துரோக சட்டத்தின் கீழ் வராது என தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசிக்காக ஒதுக்கப்பட்ட ₹35,000 கோடி எப்படி செலவிடப்பட்டது- மோடி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி