நாடெங்கும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஜனவரி 23 ஆம் தேதி நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம், பிப்ரவரி 27 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்தியாவில் போலியோ வைரஸைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிவேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 2,38,018 பேர் பாதிக்கப்பட்டு, 310 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1,57,421 பேர் குணம் அடைந்துள்ளநிலையில், 17,36,628 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு நாட்களில் மக்கள் வெளியே வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜனவரி 23 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம், வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.