சென்னையிலிருந்து சேலத்துக்கு 3 மணி நேரத்தில் செல்லும் வகையில் 8 வழிச்சாலை திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு தமிழக எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.எனினும் இந்த திட்டத்தால் தொழிற்சாலைகள் பெருகும் , வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று ஆளும் கட்சி கூறி வந்தது.

இதனிடையே விவசாயிகளின் விருப்பத்துக்கு மாறாக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.அதற்காக நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு கல்லும் நடப்பட்டது. தற்போது உள்ள சாலையின் படி சென்னையிலிருந்து சேலத்துக்கு செல்ல 274.300 கி.மீ .தூரம் உள்ளது. ஆனால் இந்த பசுமை வழிச்சாலை திட்டத்தால் 250.300 கி.மீ. தூரமே இருக்கும் என்று தமிழக அரசின் கருத்தாக இருந்தது.

இதனால் பயண தூரம் மிச்சப்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. இந்த திட்டம் சேலத்திலிருந்து தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை , காஞ்சி மாவட்டங்கள் வழியாக 8 வழிச்சாலை திட்டத்தை அமல்படுத்த திட்டமிடப்பட்டது.இந்த திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது.

இந்த நிலையில் தீடிர் என எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

8 வழிச்சாலை திட்டத்தை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் திட்டத்தை இறுதி செய்யும்வரை நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாது எனவும் மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

இதையடுத்து, 8 வழிச்சாலை திட்டத்திற்காக மரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்தில், வனத்துறை அதிகாரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த செய்தி கேள்விப்பட்ட உடன் பல விவசாயிகள் இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன