சின்னத்திரை நடிகை சித்ரா நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த 9 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரேத பரிசோதனை முடிவில் சித்ரா தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யபட்டதாக காவல்துறை தெரிவித்தது. இதனையடுத்து கடந்த 6 நாட்களாக போலீசார் சித்ரா, தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.
நடிகை சித்ராவின் தற்கொலை குறித்து அவரது கணவர் ஹேமந்த்திடம் கடந்த 6 நாட்களாக நசரேத்பேட்டை போலீஸார் விசாரித்து வந்தனர். அத்துடன் சித்ராவின் குடும்பத்தினர், ஹேமந்த்தின் குடும்பத்தினர், சித்ரா கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சியின் இயக்குநர், தயாரிப்பாளர், விடுதியின் ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் போலீஸார் விசாரணையை தொடர்ந்தனர்.
இதற்கிடையில் மகளின் தற்கொலைக்கு கணவர் ஹேமந்த் காரணம் என சித்ராவின் தாயார் திட்டவட்டமாக தெரிவித்து வந்தார். இந்த வழக்கில் ஆர்டிஓ விசாரணையும் நடத்தப்பட்டது. மேலும் நடிகை சித்ராவின் தற்கொலையில் அதிமுக அமைச்சருக்கும் தொடர்பு இருப்பதாக சர்ச்சை வெடித்தது.
இந்நிலையில் நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய புகாரில் ஹேமந்த்தை நசரத்பேட்டை போலீஸார் கைது செய்துள்ளனர்.