தொடர் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டி பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழில் நேரம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் நிவின் பாலி கேரளா மக்களுக்காக உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “கடவுளின் தேசம்” எனப்படும் கேரளாவில் பிறந்து வளர்ந்தவன் என்பதிலும், கேரளா “இந்தியா” என்கிற மாபெரும் தேசத்தின் ஒரு பகுதி என்பதில் மிக மிக பெருமை கொண்டிருந்தேன், என்றும் பெருமைபட்டு கொண்டே இருப்பேன் என்பதில் ஐயமில்லை.
ஆனால் இன்று, எங்களது அழகிய கேரளா வெள்ளத்தாலும், நிலச்சரிவினாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக் கணக்காணோர் உயிரிழந்துள்ளனர். எண்ணற்ற மக்கள் தங்கள் உடமைகளை இழந்து வீடு, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கின்றனர். என் மாநில மக்கள் நிலைமை என் மனதை பிசைகிறது. இந்த நேரத்திலும் ஒரு நம்பிக்கை கீற்றாய் என் மனதில் ஒளி பாய்ச்சுவது என் தேசத்தின் ஒற்றுமை தான்.
வேற்றுமையில் ஒற்றுமை என்கிற தத்துவத்தில் நம்பிக்கை உள்ள என் தேசத்து மக்கள், என் மாநிலத்தையும், மாநில மக்களையும் கைவிட மாட்டார்கள் என நம்புகிறேன். வரலாறு காணாத இந்த வீழ்ச்சியிலிருந்து வீறுகொண்டு எழுந்து, மீண்டும் ராஜநடை போடும் கேரளா என்பதில் ஐயமே இல்லை. உங்களால் முடிந்த அளவுக்கு அத்தியாவசியப் பொருள்களை உடனடியாகக் கேரளாவுக்கு அனுப்புங்கள்.
கடவுளின் தேசத்தை மனிதநேயம் மீட்டுக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் நான் உள்ளேன். நம்புகிறேன், பிராத்திக்கிறேன். கைகூப்பி வேண்டுகிறேன்” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.