நேற்று நடைபெற்ற மக்களவை தேர்தலில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் ஓட்டு போட சென்றபோது, சிவகார்த்திகேயனின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்றும் அவரது மனைவி பெயர் மட்டுமே இருப்பதாகவும், அதனால் அவரது மனைவியை மட்டுமே ஓட்டு போட அனுமதிக்க முடியும் என்றும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் அதிருப்தி அடைந்த சிவகார்த்திகேயன் தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார். இந்த செய்தி மேலிடம் வரை பரவியதும் சிவகார்த்திகேயனுக்கு சேலஞ்ச் ஓட்டு போட தேர்தல் அதிகாரிகள் அனுமதித்தனர். இந்த செய்தி தமிழகம் முழுவதும் வேகமாக பரவியது.
இதேபோல் அறந்தாங்கி அருகே எருக்கலகோட்டை என்ற வாக்குச்சாவடியில் தேன்மொழி என்ற பெண் ஓட்டு போட வந்தபோது வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இல்லாததால் தேர்தல் அதிகாரிகள் அவரை ஓட்டு போட அனுமதிக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தேன்மொழி எவ்வளவோ சொல்லி பார்த்தும் அதிகாரிகள் கேட்கவில்லை.
இதனையடுத்து ஆத்திரம் அடைந்த தேன்மொழி, சிவகார்த்திகேயன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாதபோது அவரை மட்டும் ஓட்டு போட எப்படி அனுமதித்தீர்கள். சிவகார்த்திகேயன் என்ன ஸ்பெஷலா? நடிகர் என்பதால் அவருக்கு சலுகையா? சிவகார்த்திகேயனுக்கு ஓட்டு போட அனுமதி அளித்தது போல் என்னையும் அனுமதிக்க வேண்டும், அல்லது சிவகார்த்திகேயனை ஓட்டு போட அனுமதித்து தவறு என தேர்தல் அதிகாரிகள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கூறினார். அதுமட்டுமின்றி ஓட்டுச்சாவடி அருகே தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார்.
இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் அறந்தாங்கி காவல் துணை காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து தேன்மொழியுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்தே தேன்மொழி தர்ணாவை கை விட்டார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் ஏற்பட்டது.