நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, 70 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாக குடியரசுத் தலைவர், பிரதமர் அலுவலகத்திற்கு புகார் அளித்துள்ளார் ஜெர்மன் நாட்டில் சுகாதாரத்துறையில் பணியாற்றி வரும் இலங்கை பெண்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. தற்போது சார்பட்டா டெடி, எனிமி உள்ளிட்ட தமிழ் படங்களிலும், புஷ்பா என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.
நடிகர் ஆர்யா முன்னதாக தனக்கு பெண் தேடும் படலமாக கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
16 பெண்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் தனக்கான பெண்ணை ஆர்யா தேர்வு செய்வார் என கூறி நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. இறுதியில் நிகழ்ச்சியில் பங்கேற்ற யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
கடைசியாக நடிகர் ஆர்யா கடந்த 2019 ஆம் ஆண்டு தன்னுடன் கஜினிகாந்த் படத்தில் ஜோடியாக நடித்த நடிகை சாயிஷாவை திருமணம் செய்துக் கொண்டார். தொடர்ந்து இருவரும் படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ஆர்யா மீது ஜெர்மன் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணான விட்ஜா என்பவர் ஜெர்மனி நாட்டில் சுகாதாரத்துறையில் பணியாற்றி வருகிறார். இவர், நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக, பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.
விட்ஜா தனது புகாரில், “ஆர்யாவும், நானும் 3 வருடங்களாகக் காதலித்து வந்தோம். என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கொஞ்சம், கொஞ்சமாக என்னிடமிருந்து 70,40,000 ரூபாய் பெற்றுள்ளார். பிறகு என்னை திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.
மேலும் பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டபோது, கொரோனாவால் பட வாய்ப்புகள் இல்லாததால் பண நெருக்கடியில் இருக்கிறேன் எனக் கூறி ஏமாற்றி வருகிறார்.
இதுகுறித்து கேட்டபோது, அவரது தாயார் என்னை மோசமான வார்த்தைகளால் என்னை திட்டினார்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த புகாரில் நடிகர் ஆர்யாவிற்கு பணம் அனுப்பியதற்கான பரிவர்த்தனை ஆதாரங்களையும் இணைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஆர்யா மீது புகார் கொடுத்துள்ளதால், அதனை திரும்ப பெற வேண்டும் எனவும் இல்லை என்றால் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் நடிகர் ஆர்யா தன்னை மிரட்டுவதாகவும் விட்ஜா குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மேலும் ஆர்யா என்ன மிரட்டினாலும் தனது புகாரை வாபஸ் பெறப்போவதில்லை என்றும் விட்ஜா திட்டவட்டமாக கூறியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக தான் பட்ட வேதனைக்கு அளவே இல்லை என்று கூறியுள்ள விட்ஜா, தனக்கு நீதி கிடைக்கும் வரை பின்வாங்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கும் அவர் நன்றி கூறியுள்ளார்.
இந்த புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சகம், தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. எனவே விரையில் தமிழக அரசு ஆர்யா மீது நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக விட்ஜா தெரிவித்துள்ளார். இச்சம்பவம் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகண்ட் பனிப்பாறை சரிந்து விபத்து; ஆதரவற்ற 4 பெண் குழந்தைகளை தத்தெடுத்த நடிகர் சோனு சூட்