ஊழல் புகாரில் சிக்கிய மேவாலால் சவுத்ரி, பீகார் மாநில நிதிஷ்குமாரின் அமைச்சரவில் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டது சர்ச்சையானதால், மூன்றே நாட்களில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பீகார் முதல்வராக 4-வது முறையாக மூன்று நாட்களுக்கு முன்னர் நிதிஷ்குமார் பதவியேற்றார். அவருடன் பாஜக, ஜேடியூ, கூட்டணி கட்சிகளின் 14 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இதில் ஜேடியூ மூத்த தலைவர்களில் ஒருவரான மேவலால் சவுத்ரி மாநில கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டது சர்ச்சையை எழுப்பியுள்ளது.

மேவாலால் சவுத்ரி கடந்த 2017 ஆம் ஆண்டு, பகல்பூர் வேளாண் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தார். அப்போது உதவி பேராசிரியர்கள் மற்றும் உதவி ஆராய்ச்சியாளர்கள் நியமிக்கப்பட்டதில் ஊழல் செய்த குற்றச்சாட்டிற்காக ஐபிசி 420 பிரிவில் வழக்குகள் பதிவாகியுள்ளன.

சவுத்ரி மீது வழக்கு தொடர அப்போது ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த் அனுமதி வழங்கியதை அடுத்து, வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த வழக்கில் இன்னும் தீர்வு எட்டப்படாத நிலையில், மேவாலால் செளத்ரி பீகார் மாநிலத்தின் கல்வி அமைச்சராக பதவியேற்றுள்ளார். இது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

இதுகுறித்து பீகாரின் முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி பிரசாத் யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக, அவர் தனது ட்விட்டர் பதிவில், “மேவாலால் சவுத்ரி மீது பல்வேறு ஊழல் வழக்குகள் பதிவாகியுள்ளன. இவருக்கு தேசிய கீதம் கூடப் பாடத் தெரியவில்லை. இதுபோன்றவரைக் கல்வி அமைச்சராக அமர்த்துவது அவமானம் இல்லையா நிதிஷ்ஜி?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், சிறுபான்மை சமூகத்தவருக்குப் பிரதிநிதித்துவம் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி மீது எழுந்துள்ளது

இத்தகைய அடுத்தடுத்த புகார்களால் பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதனையடுத்து மேவாலால் சவுத்ரி பதவி ஏற்று 3 நாட்களிலேயே இன்று (நவம்பர் 19) தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 

சமூக நீதியை, இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட பாடுபடும் பாஜக அரசு- தலைவர்கள் கண்டனம்