தேவை என்றால் பிரதமர் இல்லம் முன் சென்று போராடுவேன், குடியரசு தலைவரையும் சந்தித்து முறையிடுவேன் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு எதிராக துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி உயர்த்தினார். அதனால் பைலட் உள்பட அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் மீது தகுதி நீக்க நோட்டீஸை ராஜஸ்தான் சபாநாயகர் அனுப்பினார்.
இது தொடர்பாக ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சச்சின் பைலட், அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று நீதிமன்றம் கூறியது. அதனை தொடர்ந்து ராஜஸ்தான் சட்டமன்றத்தை கூட்டி, தனது பெரும்பான்மையை காட்ட அசோக் கெலாட் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்நிலையில், இன்று (ஜூலை 25) நடைபெற்ற காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் அசோக் கெலாட், “தேவைப்பட்டால் பிரதமர் இல்லம் முன்பு சென்று போராடுவேன். குடியரசு தலைவரையும் சந்தித்து முறையிடுவேன். ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை முறியடிக்க பாஜக மேற்கொள்ளும் சதி வெற்றி பெற விடமாட்டேன்” எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
முன்னதாக சட்டசபையை விரைவில் கூட்ட வேண்டும் என்று அசோக் கெலாட் விடுத்த கோரிக்கையை ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா இன்னும் ஏற்கவில்லை. இதையடுத்து ஜூலை.24 அசோக் கெலாட் ஆதரவு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜ்பவனில் தர்ணாவில் ஈடுபட்டனர்.
மேலும் வாசிக்க: பெண் ஒருவர் அளித்த புகாரில், ஆர்எஸ்எஸ் மாணவரணி தலைவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு…
ராஜஸ்தானில் சட்டசபை கூட்டத்தொடரை கூட்டுவதற்கு முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடர்ந்து ஆளுநரை வலியுறுத்தி வரும் நிலையில், எதிர்க்கட்சியான பாஜக தலைவர் சதீஷ் பூனியா தலைமையில் 15 பேர் கொண்ட பாஜக குழு ஆளுநரை சந்தித்து மனு அளித்துள்ளது. அந்த மனுவில், அரசு என்பதே இல்லாத சூழ்நிலையை காங்கிரஸ் உருவாக்கியுள்ளது என குற்றம்சாட்டியுள்ளது.
தொடர்ந்து பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், இதுபோன்று ஆளும் கட்சிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தி பாஜக ஆட்சியை கைப்பற்றுவது தொடர்கதையாக உள்ளது என பல்வேறு அரசியல் கட்சிகளும் குற்றம் சாட்டிவருவது குறிப்பிடத்தக்கது.