தமிழக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான புகார் மீது விசாரணை  நடத்திய தமிழக லஞ்ச ஒழிப்பு துறை முதல்கட்ட அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.  மதுரை தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழக அமைச்சர் கே.டி.ராஜேந்திர  பாலாஜி, ராஜபாளையம் அருகே தேவதானத்தில் ரூ.74 லட்சம் மதிப்பிற்கு 35 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார்.

இந்த நிலத்தின் அசல் மதிப்பு ரூ.6  கோடியாகும். மேலும், திருத்தங்கல் பகுதியில் ரூ.23.33 லட்சத்துக்கு 2 வீட்டுமனைகளும், ரூ.4.23 லட்சத்திற்கு 75 சென்ட் நிலமும்  வாங்கியுள்ளார். இந்த சொத்தின் சந்தை மதிப்பு ரூ.1 கோடிக்கு அதிகமாகும்.

எனவே, எனது புகாரின் மீது விசாரணை நடத்தி அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு இயக்குனருக்கு  உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு 2014ல் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணக்கு வந்தபோது, மனுதாரர் புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார்  விசாரித்து வருவதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய  உத்தரவிடப்பட்டது.

வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் தாக்கல் செய்த பதில் மனுவில், புகார் மீது நடத்தப்பட்ட விசாரணையில், ராஜேந்திர பாலாஜி மீதான  புகாருக்கு எந்த முகாந்திரமும் இல்லை என தெரியவந்துள்ளது. இதனால் அவர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க  வேண்டியதில்லை. விசாரணையை தொடர வேண்டியதில்லை என்று கூறப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் ஆனால் இதை எற்க மறுத்து  அளித்த உத்தரவில்,  “அமைச்சராக இருந்த 23.5.2011 – 20.4.2013 கால கட்டத்தை மட்டுமே கணக்கில் கொண்டு விசாரணை நடத்தி புகாரை லஞ்ச ஒழிப்புத்துறை  ஆரம்பகட்ட விசாரணை செய்து, அதன் மீது நடவடிக்கை தேவையில்லை என புகாரை முடித்துள்ளது.  ஆனால் 1996ல் திருத்தங்கல்  பேரூராட்சியின் துணைத்தலைவராக ராஜேந்திர பாலாஜி பதவி வகித்துள்ளார். அரசு பதவியான அந்த பதவியும் கணக்கில்  எடுத்துக்கொள்ள வேண்டும்.  அதனடிப்படையில், 1996 முதல் 2018 பிப்ரவரி வரையிலான காலத்தில் அவரது வருமானத்தை கணக்கில் கொண்டு, லஞ்ச ஒழிப்புத்துறை  விசாரிக்க வேண்டியது அவசியம்.

அவர் மீதான புகார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி அந்தஸ்துக்கு குறையாத ஐபிஎஸ் அதிகாரியைக்  கொண்டு முழுமையாக விசாரித்து முதல் அறிக்கையை வரும் ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் சீலிட்ட கவரில் விசாரணை அறிக்கை தாக்கல்  செய்யப்பட்டது. அதில், இந்த வழக்கில் மேலும் பல சாட்சியங்களும் ஆதாரங்களும் தேவைப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

கால தமாதம் இனிமும் செய்ய கூடாது என இதையடுத்து, அடுத்தகட்ட அறிக்கையை வரும் அக்டோபர் 8ம் தேதி தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.