தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு கடந்த 2014-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட முதல் சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 90 இடங்களில் வெற்றி பெற்று தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சியைப் பிடித்தது. ஆந்திரத்தில் இருந்து தெலங்கானாவை பிரிக்கும் தனிமாநிலக் கோரிக்கையை முன்வைத்துப் போராடி பெற்ற வெற்றிக்காக சந்திரசேகர் ராவுக்கு கிடைத்த பரிசாகவே தேர்தல் வெற்றி கருதப்படுகிறது

தெலங்கானாவில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சியில் உள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை பதவிக்காலம் உள்ள நிலையில், மாநிலத்தில் முன்கூட்டியே “தேர்தலை சந்திக்க தயாராக இருங்கள்’ என்று தனது கட்சியினருக்கு அவர் சில நாள்களுக்கு முன்பு அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், மாநிலப் பேரவையைக் கலைப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறியிருப்பது, தெலங்கானாவில் முன்கூட்டியே சட்டப் பேரவைத் தேர்தல் வருவதை உறுதி செய்துள்ளது.

இதற்கான முன்னேற்பாடுகளிலும் அக்கட்சி இறங்கிவிட்டது. இந்த ஆண்டு இறுதியில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிúஸாரம் ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தெலங்கானாவில் ஆட்சி கலைக்கப்படும் பட்சத்தில் அங்கும் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.

இந்நிலையில், தேர்தலுக்கு தயாராகும் வகையில் தெலங்கானா ராஷ்டிர சமிதி சார்பில் ஹைதராபாத் புறநகர் பகுதியான கோங்கரா கலானில் “பிரகதி நிவேதன சபா’ என்ற பெயரில் பிரமாண்டமான மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அப்போது அவர் கூறியதாவது: தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கையில் வெற்றி பெற்றதுடன், மக்களுடைய ஆசீர்வாதத்துடன் தெலங்கானா ராஷ்டிர சமிதி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மாநிலத்தில் ஆட்சி அமைத்தது. மாநிலத்தின் வருவாயை பல மடங்கு உயர்த்தியுள்ளோம். உதாரணமாக மணல் குவாரிகள் மூலம் காங்கிரஸ் ஆட்சியில் 10 ஆண்டுகளில் ரூ.9.6 கோடி மட்டுமே வருவாய் கிடைத்தது.

இப்போது நாங்கள் 4 ஆண்டுகளில் மணல் குவாரிகளை முறைப்படுத்தி ரூ.1,980 கோடி வருவாய் ஈட்டியுள்ளோம். எங்கள் ஆட்சியில் தெலங்கானா மாநிலம் பொருளாதார வளர்ச்சியில் நாட்டிலேயே முதல் மாநிலமாக உள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் தெலங்கானா 14 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது. மாநிலத்தில் தொடர்ந்து நல்லாட்சி நிலவ மக்கள் மீண்டும் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

எதிர்க்கட்சிகளின் பொய்யான வாக்குறுதிகளை நம்ப வேண்டாம். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் அதிகாரம் மாநிலக் கட்சிகளிடம் இருப்பதுபோல, நாமும் அதிகாரத்தை நமது கையில் வைத்துக் கொள்ள வேண்டும். தில்லியில் இருந்து செயல்படும் (தேசிய) கட்சிகளுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு நாம் அடிமையாக கூடாது என்றார்

மேலும் தெலங்கானா மாநில சட்டப் பேரவையை கலைப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். இது தொடர்பாக முடிவெடுக்க மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் எனக்கு அதிகாரம் அளித்துள்ளனர். மாநிலத்தை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சியில் தொடர வேண்டும் என்று மாநில மக்கள் விரும்புகிறார்கள். மாநிலத்தில் கடந்த 4 ஆண்டுகளில் நாங்கள் செய்துள்ள சாதனைகளுக்கு மக்களாகிய நீங்களே சாட்சி என்று சந்திரசேகர் ராவ் பேசினார். இந்தக் கூட்டத்தில் 25 லட்சம் பேர் பங்கேற்றதாக தெலங்கானா ராஷ்டிர சமிதி தெரிவித்துள்ளது. 

தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி அண்மைக் காலமாக பாஜகவுடன் நெருங்கிச் செல்வதாகக் கூறப்படுவது குறித்து மக்களவை எம்.பி.யும், சந்திரசேகர் ராவின் மகளுமான கவிதா செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநிலங்களவைத் துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளரை ஆதரித்தது உள்பட நாடாளுமன்றத்தில் நாங்கள் எடுத்த சில நிலைப்பாடுகளை வைத்து பாஜகவுடன் அனுசரித்து செல்கிறோம் என்று கூற முடியாது.

பல விஷயங்களில் பாஜகவை எங்கள் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. எனினும், மாநில நலன் கருதி மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சியுடன் பேச்சு நடத்த வேண்டியுள்ளது. அடுத்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகும் மாநில நலன் கருதியே அரசியல் முடிவுகளை எடுப்போம் என்றார்.

தெலங்கானா மாநில அமைச்சரும், சந்திரசேகர் ராவின் மகனுமான கே.டி.ராமா ராவ் கூறியதாவது மக்களைச் சந்திக்க இதுவே சரியான தருணம் என்று கருதுகிறோம். இந்த ஆண்டு இறுதியில் தெலங்கானா சட்டப் பேரவைத் தேர்தலில் வெல்வதுடன், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் மக்களவைத் தேர்தலிலும் நாங்கள் அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம். இதன் மூலம் மத்தியில் ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியாக எங்கள் கட்சி இருக்கும் என்றார்.