சாத்தான்குளம் இரட்டைக் கொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் நாளை ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளைச்சிறையில் விசாரணை கைதிகளாக இருந்த செல்போன் கடை உரிமையாளர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் மரணமடைந்த விவகாரம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது.

இதுதொடர்பாக இன்று நெல்லையில் வணிகர் சங்க மாநிலத் தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஆகியோர் காவல்துறையினரின் கொடூரமான தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். அவர்கள் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும். ஏற்கனவே இதுகுறித்து தமிழக முதல் அமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.

இந்த கொடூர தாக்குதலுக்கு நீதி கேட்டு பலியான இரு உயிர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் நாளை ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறும். தொடர்ந்து நாளை மாலை 5 மணிக்கு அந்தந்த சங்கத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி கூட்டம் நடத்தப்படும். இந்த ஒரு நாள் கடையடைப்பு என்பது அடையாள கடையடைப்பு மட்டுமே.

மேலும் வாசிக்க: சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு.. அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

தொடர்ந்து, வரும் 30ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் நேரடியாக பேரமைப்பு நிர்வாகிகள் சென்று புகார் மனு அளிக்கும் அறப்போராட்டம் நடைபெறும். எங்களது கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தீவிர போராட்டத்தில் ஈடுபடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து, மருந்து வணிகர்கள் சங்கமும் நாளை காலை 7 மணி முதல் 11 மணி வரை மருந்து கடைகளை மூட ஆதரவளித்துள்ளனர்.

மேலும் தமிழகத்தில் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள வியாபாரிகள் சாத்தான்குளத்தில் நடைபெற்ற சம்பவத்திற்கு பிறகு அச்சமாகவே உள்ளனர். இந்த சம்பவத்தில் தமிழக அரசு ஏதோ நடவடிக்கை எடுத்தது போல தெரிவித்து வருகிறது. இவை அனைத்தும் கண்துடைப்புக்காக செய்யப்பட்டுள்ளது” எனவும் தெரிவித்துள்ளார்.