விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹரியானா மாநிலத்திலுள்ள 17 மாவட்டங்களில் இணைய சேவையை முடக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 65 நாட்களாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராடி வருகின்றனர். வேளாண் சட்டங்களை எதிர்த்து தற்கொலை, கடும் குளிர் உள்ளிட்ட காரணங்களால் இதுவரை 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்து உள்ளனர்.
இந்நிலையில், குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில் திடீரென்று வன்முறை ஏற்பட்டது. விவசாயிகளின் கூட்டத்தில் விவசாயிகள் அல்லாத வெளி ஆட்கள் நுழைந்து, இந்த வன்முறையை நிகழ்த்தியதாக விவசாயச் சங்க தலைவர்கள் உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில் டெல்லி எல்லையில் போராடி வரும் பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைத், விவசாய சட்டங்களை ரத்து செய்யாமல் மத்திய அரசு மிகப்பெரிய அநீதியை விவசாயிகளுக்கு நிகழ்த்தியுள்ளதாகக் கூறி, கண்ணீர் விட்டு அழுதார். இந்த வீடியோ ஹரியானா மாநிலம் முழுவதும் வைரலானது.
மூத்த விவசாயச் சங்க தலைவர் ஒருவரை கண்ணீர் விடும் நிலைக்கு மத்திய அரசு தள்ளியதாகக் கூறி, ஹரியானா மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகள் டெல்லி எல்லையை நோக்கி முற்றுகையிட தொடங்கினார். ஹரியானாவின் ஜிந்த், ரோஹ்தக், கைதால், ஹிசார், பிவானி மற்றும் சோனிபெட் என மாநிலம் முழுவதும் இருந்து விவசாயிகள் போராட்ட களத்திற்குச் சென்றனர்.
இந்நிலையில், ஹரியானா மாநிலத்திலுள்ள 17 மாவட்டங்களில் இணையச் சேவையை முடக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் நாளை மாலை 5 மணி வரை இணைய சேவை முடக்கப்படுவதாகவும், வாய்ஸ் கால் சேவை மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
டெல்லி எல்லைகளில் குவியும் விவசாயிகள்; அப்புறப்படுத்த போராடும் காவல்துறை