மத்தியில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைந்தால் கல்விக் கடன், விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்படும் என ஓசூரில் நடந்த கிராம ஊராட்சி சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
 
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தொரப்பள்ளி ஊராட்சியில் இன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில்,
 
வணக்கம். திமுக ஊராட்சி சபைக் கூட்டத்தை கடந்த ஜனவரி 3ம் தேதி துவங்கினோம். நான் முதன்முதலில் திருவாரூர் தொகுதியில் புலிவதனம் ஊராட்சியில் தான் முதன்முதலில் துவக்கி வைத்தேன். இப்பொழுது கிட்டத்தட்ட 95 சதவிகிதம் முதல் 98 சதவிகிதம் ஊராட்சி சபைக்கூட்ட பணிகளை முடித்து விட்டோம் எப்படியும் இந்த மாதத்திற்குள் எல்லாவற்றையும் முடிக்கப் போகின்றோம்.
 
இந்த தொரப்பள்ளி ஊராட்சிக்கு ஒரு பெரிய வரலாறு இருக்கிறது. மறைந்த நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் 1972ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த போது இந்த ஊருக்கு அவர் வந்திருக்கின்றார். எதற்கு என்று கேட்டால், மூதறிஞர் இராஜாஜி அவர்களின் இல்லத்தை சீர்படுத்தி அதை அரசுடமையாக்கி அவர்கள் தான் திறந்து வைத்தார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
 
அதுமட்டுமல்ல, தொரப்பள்ளி அருகே தென்பண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி சுமார் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயத்திற்கு தேவையான நீர்ப்பாசனம் செய்து கொடுத்தவரும் அன்றைக்கு முதல்வராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் தான் என்பதையும் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.
உள்ளாட்சித் தேர்தல் மட்டுமல்ல, இன்றைக்கு பார்த்தீர்கள் என்றால் தமிழ்நாட்டில் 21 தொகுதிகளில் எம்.எல்.ஏ இல்லாமல் இருக்கின்றது.
 
நிச்சயமாக மோடி ஆட்சியை அப்புறப்படுத்தக்கூடிய சூழல் வந்துவிட்டது. மோடி ஆட்சி அப்புறப்படுத்தப்படுகின்ற போது திமுக தயவோடு, திமுக கூட்டணியில் மத்தியில் ஒரு சிறப்பான ஆட்சி அமையப்போகின்றது.
 
திமுகவால் அடையாளம் காட்டப்படுபவர் தான் இந்த நாட்டின் பிரதமராக வரப்போகின்றார் என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்கப் போவாதில்லை.
 
சென்ற தேர்தலில் பெரிய வித்தியாசம் ஒன்று இல்லை 1.1 சதவிகிதம் தான். திமுக ஆட்சியில் இல்லாவிட்டால் கூட, நமக்கும் அவர்களுக்கு ஓட்டு வித்தியாசம் என்னவென்று பார்த்தீர்கள் என்றால், 1.1 சதவிகிதம் தான். 1 சதவிகிதம் கூட வாங்கியிருந்தால் இன்றைக்கு நாம் ஆட்சியில் இருந்திருப்போம். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.
 
ஜெயலலிதாவைப் பொறுத்த வரையில் அரசியல் ரீதியாக நமக்கு எதிரி தான். ஆனால், முதல்வராக இருந்து மறைந்தவர் அவர். அதுவும் மர்மமான முறையில் இறந்தவர் அவர். அதற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் திமுக ஆட்சியில் சிறையில் தள்ளப்படுவார்கள்.
 
 
நேற்றைக்கு பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைவர் மதிப்பிற்குரிய அமித்சா அவர்கள் தமிழ்நாட்டில், மதுரைக்கு வந்திருக்கின்றார்.
 
அவர் என்ன பேசியிருக்கின்றார் என்றால், யார் பிரதமர் என்று கூட சொல்ல முடியவில்லை. எதிரில் அமைந்திருக்கக்கூடிய கூட்டணிக்கு யார் தலைவர் என்று கூட சொல்ல முடியவில்லை என்று சொல்லிவிட்டு அதோடு விடவில்லை.
 
திங்கட்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை ஒவ்வொருவர் பெயரைச் சொல்லி அவர்கள் தான் முதல்வர் என்றும், சனிக்கிழமை மு.க.ஸ்டாலின் பிரதமர் என்று சொல்லியிருக்கின்றார்.
 
என் பெயரை ஞாபகமாக வைத்து சொன்னதற்கு அமித்சாவிற்கு நன்றி. ஆனால், ஞாயிற்றுக்கிழமை அன்றைக்கு விடுமுறையாம் ஏனென்றால் அன்றைக்கு பிரதமர் கிடையாதாம். இப்பொழுது இந்தியாவில் பிரதமருக்கு நிரந்தரமாக விடுமுறை. ஏனென்றால், பிரதமர் நாட்டில் கிடையாது.
 
அவர் வெளிநாட்டில் சுற்றிக் கொண்டிருக்கின்றார். இது அமித்சாவிற்கு தெரியவில்லை, மோடி வரமாட்டார் என்பதை அமித்சா ஒத்துக்கொண்டார். நாங்கள் தான் பிரதமர்களாக வரப்போகின்றோம் என்று அவரே வெளிப்படையாக பேச ஆரம்பித்து விட்டார். அவருடைய தோல்வி அவருக்கே வெளிப்படையாக தெரிய ஆரம்பித்திருக்கின்றது.
 
உங்கள் பிரச்னைகளை என்னிடத்தில் சொல்லியிருக்கின்றீர்கள், கவலைப்படாதீர்கள். நான் இருக்கின்றேன். எப்படி கருணாநிதி இருக்கின்ற போது உங்களுடைய பிரச்னைகளை தீர்த்து வைத்தாரோ, அதேபோல் தீர்த்து வைக்க அவருடைய மகன் நான் இருக்கின்றேன். கருணாநிதி விட்டுச் சென்ற அந்தப் பணியை தொடங்குவதற்கு நான் இருக்கின்றேன், என்று சொல்லிக்கொண்டு என்னுடைய உரையை நிறைவு செய்கின்றேன் என்றார்.