கேரளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் 7.25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்கள் வீடு, வாசல் மற்றும் உடமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். தொடர்ந்து பெய்த கனமழையால் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆலுவா, சாலக்குடி, செங்கன்னூர், ஆலப்புழா, பத்தனம்திட்டா ஆகிய நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 357 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளம் சூழ்ந்த மாவட்டங்களில் ராணுவ வீரர்கள், கடலோர காவல்படை, விமானப்படை, தேசிய மற்றும் பேரிடர் மீட்பு படையினர், தீயணைக்கும் படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர் . மழை நின்ற நிலையில் இப்போது அவர்கள் பணி முடிந்து திரும்ப உள்ளனர் இந்நிலையில், துரிதமாக செயல்பட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட வீரர்களுக்கு ஆகஸ்டு 26-ஆம் தேதி நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மேலும் கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் ரூ.700 கோடி நிதியுதவி அளிக்க விரும்புவதாக தெரிவித்திருந்தது. இதற்கு, கேரள முதல்வர் பினராயி விஜயனும் பிரதமர் மோடியும் தங்களது நன்றியை தெரிவித்தனர். ஆனால் இந்திய கொள்கைகளின் அடிப்படையில் மத்திய அரசு இதை ஏற்க மறுப்பதாக தெரிவித்தது.

இதற்கு காரணம் 2004-இல் சுனாமி பேரழிவின் போது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், வெளிநாடுகளின் நிதியுதவியை ஏற்க மறுத்தார். அன்று முதல் இந்த கொள்கை இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டு வரப்படுகிறது.

இந்நிலையில், நல்லெண்ண அடிப்படையில் வரும் வெளிநாட்டு நிதியை ஏற்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஐக்கிய அரபு அமீரக நிதியுதவி விவகாரத்தில் தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, பொறுத்திருந்து பார்ப்போம். 2016 பேரிடர் மேலாண்மை கொள்கையின் படி, பேரிடர் காலங்களில் வெளிநாடுகள் அளிக்கும் உதவியை மத்திய அரசு ஏற்கலாம். மற்றொரு நாடு நல்லெண்ண அடிப்படையில் நிதியுதவி வழங்கினால் அதனை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அமீரக 700 கோடி உதவி வேண்டாம் என்கிற மத்திய அரசு ., கேரள அரசு கேட்கின்ற 20,000 கோடி இழப்பீட்டு தொகையை கொடுக்க தயாராக இருக்கிறதா என்ற கேள்வியை கேரளா மக்கள் சமூகதளத்தில் கேட்டு வருவதும் குறிப்பிடதக்கது