திமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பகுதியில், இன்று திமுக சார்பில் நடைபெற்று வரும் மக்கள் கிராம சபைக் கூட்டத்தைத் துவக்கி வைத்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்களின் குறைகளைக் கேட்பதற்கான கூட்டம் தான் கிராமசபைக் கூட்டம். அதற்காகத்தான் இந்தக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
இந்த கிராமசபை கூட்டம் என்பது வருடத்திற்கு 4 முறை நடைபெற வேண்டும். காந்தி ஜெயந்தி, குடியரசு தினவிழா, சுதந்திர தினவிழா, மே 1 தொழிலாளர் தினம் ஆகிய நான்கு நாட்கள் இதை நடத்த வேண்டும் என்பது மரபு.
நியாயமாக இந்த கிராமசபைக் கூட்டங்களை அரசு தான் நடத்த வேண்டும். தமிழக அரசு இந்த 10 ஆண்டுகளில் அவ்வாறு எதுவும் நடத்தப்படவில்லை என்பது அனைவர்க்கும் நன்றாக தெரியும். ஆனால் இதனை நடத்த விடாமல் அதிமுக ஆட்சி தடைபோடுகிறது.
மேலும் தற்போது கரப்ஷன், கமிஷன், கலெக்ஷன் இதைத்தான் அதிமுக கொள்கை அமைத்து ஆட்சியை தொடர்ந்து கொண்டிருக்கிறது. விவசாயிகளை வஞ்சித்திருக்கும் ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கிறது. வேலை இல்லா திண்டாட்டம், நாளுக்கு நாள் பெருகிக்கொண்டிருக்கிறது.
சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக்கொண்டிருக்கிறது. கஜானாவை காலி செய்து கிட்டத்தட்ட 6 லட்சம் கோடி ரூபாய் கடனில் தான் இந்த ஆட்சி போய்க்கொண்டிருக்கிறது. கல்வியையும் சுகாதாரத்தையும் தரமிழக்க வைத்துள்ளது. தமிழர்களின் பெருமையை சீரழிக்கிறது. இதனால், அதிமுகவை நிராகரிக்கவேண்டும் என்று கூறினார்.
மேலும் பேசிய மு.க.ஸ்டாலின், இதற்கு முன் திராவிட முன்னேற்றக் கழகம் 5 முறை ஆட்சியில் இருந்துள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபொழுது பெண்களுக்கு, சகோதரிகளுக்கு, தாய்மார்களுக்கு, பல்வேறு திட்டங்களை, சாதனைகளை கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது செய்து காட்டியிருக்கிறார்.
சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை. வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு. ஆரம்ப பள்ளிகளில் கட்டாயமாக பெண்களைத் தான் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று சட்டம்.
ஏழை எளிய குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு திருமண உதவித் திட்டம். கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவித் தொகை. விதவைகளுக்கு மறுவாழ்வு திட்டம், இப்படி பல திட்டங்கள் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டன.
அதேபோல் தற்போது திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.