மும்பைவின் வர்த்தக தலைநகரான மும்பையில் இன்று ஒரே நாளில் 107 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2043 ஆக உயர்ந்துள்ளது.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஆசியாவிலேயே 2வது மிக பெரிய குடிசை பகுதியான மும்பை தாராவியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவால் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர்.

வெறும் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தாராவில், தமிழர்கள் உட்பட சுமார் 15 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மும்பைக்கு செல்லும் அன்றாட தொழிலாளர்களின் புகலிடமாக தாராவி உள்ளது. ஸ்லம் பகுதி என்றாலே அது தாராவிதான். இவர்களில் நிறைய பேர் கல்வி அறிவு பெற்றிருந்தாலும், கூலி தொழில்தான் பிரதானம்.

அருகருகே தீ பெட்டி அளவில் உள்ள குடிசைகளில் மக்கள் வசிக்கும் பகுதி என்பதால் சமூக விலகல் கேள்விக்குறிதான். எந்த தொற்று ஏற்பட்டாலும் அது கட்டாயம் தாராவியை தொட்டுவிட்டுதான் செல்லும். அதனாலேயே ஏராளமானோர் இங்கு இறந்து போன வரலாறுகளும் உண்டு. தற்போது கொரோனா வைரஸும் தாராவியை பாதித்துள்ளது.

தற்போது அப்பகுதியில் இதுவரை 9 பேர் இறந்துள்ளனர். ஆனால் இறந்தவர்களின் விவரம், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் வெளியாகவில்லை. கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா, இந்திய அளவில் முதல் இடத்தில் உள்ள நிலையில் மும்பையில் மட்டும் 2043 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கையிலும் அம்மாநிலம் 178 என்ற அளவில் முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் லட்சக்கணக்கான தமிழர்கள் வாழும் தாராவியில், மக்கள் நெருக்கம் அதிகம் என்பதால் அங்கு கொரோனா பரவுவதை தடுப்பது பெரும் சவாலாக இருக்கும். எனவே இன்னும் தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.