தமிழ்நாட்டில் இரண்டாவதாக திருநங்கை சிவன்யா துணை காவல் ஆய்வாளராக தேர்வாகி உள்ளதற்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் பாவுப்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் செல்வவேல். இவருடைய மகள் திருநங்கை சிவன்யா (வயது 31). அவரது தந்தை செல்வவேல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்த திருநங்கை சிவன்யா, அரசு பள்ளி மற்றும் அரசு கல்லுாரியில் கடும் சிரமத்துக்கு இடையே படித்துள்ளார்.

சிவன்யா திருநங்கையானாலும் கூட குடும்பத்தினர் ஒதுக்கி வைக்காமல், அரவணைத்து வளர்த்துள்ளனர். பி.காம். பட்டதாரியான சிவன்யா திருவண்ணாமலையில் தனியார் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். காவல்துறையில் சேர வேண்டும் என்ற கனவுடன் படித்து வந்தவரின் கனவு தற்போது நனவாகியுள்ளது.

பெரும் போராட்டத்திற்கு இடையே படித்த திருநங்கை சிவன்யா காவல்துறை எஸ்.ஐ., தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டி.எஸ்.பி.,யாக வேண்டும் என்பதே தனது லட்சியம் என சிவன்யா கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் முதல் திருநங்கை துணை காவல் ஆய்வாளராக 2017 ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரித்திகா யாஷினி பொறுப்பேற்ற நிலையில், இரண்டாவதாக சிவன்யா தற்போது துணை காவல் ஆய்வாளராக தேர்ச்சி பெற்றுள்ளார். கடந்த ஜூலை 26 ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கையால் பணி ஆணையைப் பெற்றுள்ளார் சிவன்யா.

இதுகுறித்து திருநங்கை சிவன்யா கூறும்போது, 2019 ஆம் ஆண்டு நடந்த எஸ்.ஐ தேர்வை எழுதினேன். அதில் வெற்றி பெற்றேன். எத்தனையோ அவமானம், போராட்டங்கள், கேலி, கிண்டல்கள்னு எல்லா கொடுமைகளையும் அனுபவிச்சிருக்கேன். மனசு ரொம்ப வலிக்கும். ஆனாலும் எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டேன்.

நாம சாதிக்கணும்ங்கிற எண்ணம் மட்டும் தான் இருந்துச்சு. தொடர்ந்து படிச்சேன். வழக்கமா திருநங்கைகளுக்கு ஏற்படும் எல்லா இன்னல்களையும் அனுபவிச்சிருந்தாலும், எனக்கு என் குடும்பம் துணையா இருந்தாங்க. நான் எஸ்.ஐ ஆக தேர்ச்சி அடையும் வரை என்னை படிக்க வச்சு, தூண்டுகோலாக கூட இருந்தது எல்லாமே என் குடும்பம் தான்.

சட்டம் மற்றும் ஒழுங்கு உதவி ஆய்வாளர் பணி கிடைச்சிருக்கு. சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின், நான் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் பலன் கிடைத்த மாதிரி கடந்த 26 ஆம் தேதி அன்று தமிழ்நாடு முதல்வர் அவர்கள் கையால் பணி ஆணையை சென்னைக்கு சென்று வாங்கினேன்.

இந்த வேலை எனக்குக் கிடைச்சிருக்கிறது, என்னோட கடுமையான உழைப்புக்குக் கடவுள் தந்த பரிசு. எனக்கு என் பெற்றோர்கள் உறுதுணையா இருந்தது போல, எல்லா திருநங்கைகளுக்கும் அவங்களோட பெற்றோர்களும், இந்தச் சமூகமும் உதவியாக இருக்கணும். படிப்புதான் பற்றுனு உணர்ந்து திருநங்கை சகோதரிகள் அதில் கவனம் செலுத்தி ஜெயிக்கணும்” என்று பெருமிதமாகக் கூறியுள்ளார்.

ஒலிம்பிக் பாட்மிண்டன்: இந்தியாவிற்கான 2வது பதக்கம் வென்று சாதனை படைத்தார் பி.வி.சிந்து