தான் ஒரு தலித் என்பதால் பாஜகவில் புறக்கணிக்கப்பட்டதாக கூறி, நீர்வளத்துறை அமைச்சர் தினேஷ் காதிக் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளது உத்தரப் பிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக 2வது முறையாக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்து, தொடர்ந்து 2வது முறையாக யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பேற்றார். பாஜக ஆட்சி அமைந்ததிலிருந்து அங்கு எதிர்க்கருத்து கொண்டவர்களை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
பாஜக அரசை எதிர்த்து போராடுபவர்கள் மற்றும் அரசின் குறைகளை சொல்பவர்களை யோகி அரசு கைது செய்து வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்த நிலையிலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கின்றது.
இந்நிலையில் உத்தரப் பிரதேச அமைச்சர்களான ஜிதின் பிரசாத், தினேஷ் காதிக் ஆகியோர் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீது தற்போது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்த புகாரை பாஜக தலைமையகத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
குறிப்பாக உத்தரப் பிரதேச மாநில பாஜகவில் தலித் தலைவர்களுக்கு உரிய மரியாதை இல்லை எனக் கூறி, அக்கட்சியில் இருந்த தலித் சமூகத்தை சேர்ந்த உத்தரப் பிரதேச மாநில நீர்வளத்துறை அமைச்சர் தினேஷ் காதிக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான கடிதத்தை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் படேல் மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அனுப்பியுள்ளதாகவும் தினேஷ் காதிக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தினேஷ் காதிக் கூறும்போது, “தனக்கு கடந்த 100 நாட்களுக்கும் மேலாக எந்த வேலையும் ஒதுக்கப்படவில்லை. நீர் வளத்துறை அதிகாரிகள் பங்கேற்கும் முக்கிய கூட்டங்கள் குறித்து அமைச்சரான எனக்கு எதுவும் தெரிவிக்கப்படுவதில்லை.
தலித் சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் புறக்கணிக்கப்படுகிறேன். ஒரு மாநில அமைச்சராக தனக்கு எந்த அதிகாரமும் இல்லை. நான் பிறப்பிக்கும் உத்தரவை எந்த அதிகாரியும் கேட்பதில்லை. தொலைபேசியில் பேசினால் கூட முதன்மைச் செயலாளர் பதில் சொல்வதில்லை.
நான் அமைச்சராக பணியாற்றுவதால், தலித் சமுதாயத்திற்கு எந்த பலனும் இல்லை. இது தலித் சமூகத்தை அவமதிக்கும் செயல். அதனால்தான் நான் ராஜினாமா செய்கிறேன்” எனக் கூறியுள்ளார். மேலும் யோகி ஆட்சியில் ஊழல் நடப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் உத்தரப் பிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.