தயாரிப்பாளர்கள் சங்க துணைத் தலைவராக இருந்த கெளதம் வாசுதேவ் மேனனுக்குப் பதிலாக, நடிகர் பார்த்திபன் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத்துக்கு இன்னும் 3 மாதங்களில் தேர்தல் வர உள்ளது. இதனால் இப்போதே சங்கத்தில் சச்சரவுகள் தொடங்கிவிட்டன. கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாத விஷால் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் எனக் கூறி எதிர் அணியினர் போர்க்கொடி உயர்த்தினர்.
இதையடுத்து எதிர் அணியினர் தயாரிப்பாளர் சங்கத்தின் திநகர் மற்றும் அண்ணாசாலை அலுவலகங்களுக்கு பூட்டு போட்டனர். இதை திறக்கச் சென்ற விஷாலை போலீசார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர். தயாரிப்பாளர் சங்கத்துக்கும் சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் விஷால் நீதிமன்றத்தைதில் வழக்கு தொடுத்து அலுவலகங்களை மீண்டும் திறந்தார்.
இதையடுத்து நேற்று தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் விஷால் தலைமையில் நடந்தது. இதில் செயலாளர் கதிரேசன், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால், “சினிமா டிக்கெட்டுகளுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டதைத் தயாரிப்பாளர்கள் சங்கம் வரவேற்கிறது. பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் இளையராஜா நிகழ்ச்சியை எப்படி நடத்துவது என்பது குறித்து இந்த செயற்குழுவில் விவாதிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க அனுமதி கேட்டுள்ளோம். விரைவில் முதல்வரை சந்திப்போம்.
தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவை எப்போது கூட்டலாம் என்பது குறித்து அடுத்த செயற்குழுவில் முடிவு செய்யப்படும். தற்போது துணைத் தலைவராக இருக்கும் கெளதம் மேனனுக்குப் பதிலாக பார்த்திபன் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தயாரிப்பாளர் சங்கத்துக்குப் பூட்டு போட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உள்ளோம்” என்று கூறினார்.