கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் டைட்டிலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து விஜய் சேதுபதி, சிம்ரன் ஆகியோர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து முக்கிய காட்சிகள் சென்னை பின்னி மில்லில் படமாக்கப்பட்டது. இதில், ரஜினிகாந்த் மற்றும் விஜய் சேதுபதியின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது.

ரஜினியின் படங்கள் பெரும்பாலும், அவரது கதாபாத்திரப் பெயரையே தலைப்பாகக் கொண்டிருக்கும். ஆனால், சமீபகாலமாக அப்படி ரஜினியின் கதாபாத்திரப் பெயரைத் தலைப்பாகக் கொண்ட படங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இதற்கு பாபா, சிவாஜி, லிங்கா, காலா போன்ற படங்கள் உதாரணம். கபாலி படம் மட்டும் இதில் விதிவிலக்காக வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றதாக கூறப்பட்டது. ஆனால், பெயர் தான் படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கிறது எனக் கூற முடியாது என்பதற்கேற்பசந்திரமுகி, எந்திரன் போன்ற படங்களும் ரஜினிக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன.

இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் புதிய படத்திற்கு பேட்ட எனப் பெயரிடப்பட்டுள்ளது. நிச்சயமாக இது அவரது கதாபாத்திரப் பெயராக இருக்க வாய்ப்பில்லை. சமீபகாலமாக தொடர்ந்து தனது படங்களில் மக்கள் பிரச்சினைகள் குறித்து குரல் எழுப்பி வருகிறார் ரஜினி. அந்தவகையில், இப்படமும் அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளைப் பேசுவதாக அமையும் எனத் தெரிகிறது.

நிச்சயமாக இப்படம் ரசிகர்களுக்கு ஆக்சன் விருந்தளிக்கும் என்பது அதன் மோஷன் பிக்சர்ஸ் மூலமே உறுதியாகியுள்ளது. கத்தி, சிவப்பு என மோஷன் பிக்சர்ஸ் முழுவதும் ஆக்சனுக்கு உத்திரவாதம் அளிக்கிறது. இப்படத்தில் கல்லூரி பேராசிரியராக ரஜினி நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது. எனவே, தர்மத்தின் தலைவன், பாட்ஷா பட வரிசையில் முதல் பாதியில் சாதுவாகவும், அடுத்த பாதியில் அதிரடி ஆக்சன் ஹீரோவாகவும் ரஜினி இப்படத்தில் நடிக்கிறார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், பேட்ட படத்தின் மோஷன் போஸ்டரை ரசிகர்கள் டுவிட்டரில் தெறிக்கவிட்டு வருகின்றனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு இவ்வளவு வரவேற்பு கொடுத்த அனைவருக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது.