வரும் மக்களவைத் தேர்தலுக்கான பணிகள் குறித்து மயிலாடுதுறை, சிவகங்கை, தேனி, பெரம்பலூர், விருதுநகர் ஆகிய 5 தொகுதிகளைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். 
 
அதில் அவர் பாஜகவின் வெற்றி, மோடி, அமித்ஷாவினால் கிடைத்தது அல்ல. நிர்வாகிகள், தொண்டர்கள், பூத் கமிட்டியினரின் கடும் முயற்சியால் கிடைத்தது. நீங்கள் கடுமையாக முயற்சித்தால் வெற்றி கிடைக்கும் என்றார்.
 
மேலும், சிறு நிறுவனங்களின் முன்னேற்றமே நமது பிரதான இலக்கு. சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு விரைவாக ஒப்புதல் மற்றும் மின் இணைப்பு வழங்கி வருகிறோம். நாம் நாட்டின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு நிலையிலும் பாடுபட்டு வருகிறோம்.
 
மறுபுறத்தில் உள்ளவர்கள் தங்களுக்கென்ற சொந்த சாம்ராஜ்ஜியத்தை கட்டியெழுப்புவதற்காக பரம்பரை கட்சிகள் சந்தர்ப்பவாத கூட்டணிக்காக அணி திரண்டு உள்ளனர். மற்ற கட்சிகளைப்போல் ஓட்டு வங்கியை உருவாக்குவதற்காக நாம் பிரித்தாளும் அரசியலை நடத்தவில்லை என்றார்.
 
பாஜகவுக்கு எதிராக அமையும் எந்த கூட்டணியும் நிலைக்காது. அது சுயநலத்துக்கான குறுகியகால கூட்டணியாக முடிந்துப் போகும் என்றார்.
 
அனைவரும் ஒன்றாக இணைந்து, நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு வர செயல்பட வேண்டும். அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து சொல்லி மிகப்பெரிய வெற்றி கிடைக்க பாடுபட வேண்டும் என்றார் 
 
பாஜகவில் மட்டுமே சாதாரண மக்கள் கூட உயர்பதவிக்கு வர முடியும் என்ற மோடி, தமிழக பாஜக தலைவர் கடினமாக உழைக்கக்கூடியவர் என தமிழக தலைவர் தமிழிசைக்கும் பாராட்டு தெரிவித்தார்.
 
மேலும்  பேசிய அவர், மொழி மிகவும் முக்கியம் எனவும், நான் எப்பொழுதும் தமிழ் மொழியின் ரசிகன் எனவும், ஆனால், தமிழ் மொழி பேசத் தெரியாத துரதிர்ஷ்டசாலியாக நான் உள்ளேன் என்றார்.  
 
ஆனால் பிரதமர் மோடி உருக்கமாக  பேசிய பேச்சை சமூகவலை தளங்களில் ” உலக மகா நடிப்புடா சாமி ” என பலரும் கிண்டல் செய்து வருகின்றனர் .இன்னும் சில பதிவுகளில் அப்படி என்றால் ஏதாவது ஒரு  மத்திய திட்டத்துக்கு , உதாரணம்  “ஸ்வாட்ச் பாரத்” திட்டதுக்கு  பெயர் தமிழில் மாற்றம் செய்ய முடியுமா என்றும் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.