தமிழ்நாட்டில் 4வது மெகா தடுப்பூசி முகாம் அக்டோபர் 03 (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்த அதிவிரைவில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் மெகா தடுப்பூசி முகாம்களை தமிழ்நாடு அரசு நடத்தி வருகிறது. இதுவரை 3 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
ஆனால் ஒன்றிய அரசிடமிருந்து போதிய தடுப்பூசி வராததால் 4வது மெகா தடுப்பூசி முகாம் நடத்த சாத்தியமில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் 4வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று சுகாதாரத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் கடந்த மாதம் நடத்தப்பட்ட 3 மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் நல்ல பலன் கிடைத்துள்ளது.
கடந்த மாதம் மட்டும் 1 கோடியே 42 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார்கள். தற்போது 24 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. எனவே 4வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் அக்டோபர் 03 (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்படும். கடந்த முறை நடத்தப்பட்ட முகாமில் 2வது தவணை தடுப்பூசியை 10 லட்சம் பேர் போட்டுக்கொண்டனர்.
தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களிடையே ஏற்பட்டுள்ள இந்த விழிப்புணர்வு மற்றும் ஆர்வம் காரணமாக கூடுதலான தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார். முதல்வரின் கோரிக்கையை ஏற்று அடுத்த மாதம் 1 கோடியே 23 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள் என்றார்.
மேலும் பேசிய அமைச்சர், இந்த மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு வாரம். இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் மற்றும் அனைத்து மருத்துவமனைகளிலும் மார்பக புற்றுநோய் பரிசோதனை நடத்தப்படும். புற்று நோயை உற்று நோக்கி வருகிறோம். ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வரும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்து உள்ளார்.
வெளவால்களில் நிபா வைரஸ் நோய் எதிர்ப்புத் திறன்- அமைச்சர் வீணா ஜார்ஜ்