தேர்தல் பணியாற்றும் அரசு ஊழியர், ஆசிரியர்களில் 30 சதவீதம் பேருக்கு தபால் ஓட்டுகள் தரப்படவில்லை ஆசிரியர் முன்னேற்ற சங்கம் புகார் அளித்தனர்.
 
சென்னை தலைமைச் செயலகத்தில் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட புகார் மனுவில் கூறப்படட விவரம் பின்வருமாறு :
 
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் பணியில் சுமார் 4 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
 
சிலரது வீட்டு முகவரிக்கு தபால் ஓட்டு அனுப்பப்பட்டது. அதில் பலரது முகவரி தவறு என்று திருப்பி அனுப்பப்பட்டுவிட்டன. தபால் ஓட்டு கிடைக்காதவர்கள், அங்குள்ள வட்டாட்சியரிடம் முறையிடுகின்றனர்.
 
ஆனால் எந்தப் பலனும் இல்லை. தற்போது தபால் ஓட்டுகளை தபாலில்தான் செலுத்த வேண்டும் என்று புதிய நிபந்தனையை தேர்தல் ஆணையம் கூறுகிறது.
 
மேலும் ஓட்டு எண்ணும் 23-ந் தேதியன்றும் தபால் ஓட்டு போடுவதற்கு வசதிகள் செய்து தரப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
பின்னர் நிருபர்களுக்கு, சங்கத்தின் தலைவர் தியாகராஜன், ‘தேர்தல் பணியாற்றும் அரசு ஊழியர், ஆசிரியர்களில் 30 சதவீதம் பேருக்கு தபால் ஓட்டுகள் இன்னும் தரப்படவில்லை’ என வருத்துடன் தெரிவித்தார் .
 
தேர்தல் பணியாற்றும் அரசு ஊழியர், ஆசிரியர்களில் 30 சதவீதம் பேருக்கு தபால் ஓட்டுகள் தரப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் மூலம் இதனால் சுமார் 1.2 லட்சம் அரசு ஊழியர்கள், மற்றும் ஆசிரியர்கள் தங்களது உரிமையை இழந்துள்ளனர் . இதுவரை எந்த தேர்தலிலும் இது போல உரிமை இழப்பு நடைபெறவில்லை என்பதும் குறிப்பிடதக்கது