டெல்லியில் உள்ள இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இந்த ஆண்டிற்கான விருதுகள் பெரும் வீரர்கள் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி முகுந்தகம் சர்மா தலைமையிலான இந்த தேர்வு குழுவில் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக், சர்தார் சிங் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இன்று (ஆகஸ்ட் 21) வெளியிட்டுள்ள விருதுகள் பட்டியலில், இந்திய விளையாட்டுத் துறையில் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா-2020 விருதுக்கு பாராலிம்பிக் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன்,
இந்திய கிரிக்கெட் அணி துணை கேப்டன் ரோஹித் சர்மா, ஆசிய விளையாட்டுகள் போட்டியில் தங்கம் வென்ற வினேஷ் போகாட், டேபிள் டென்னிஸ் சாம்பியன் மணிகா பாத்ரா, ஹாக்கி வீராங்கனை ராணி ராம்பால் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
இதேபோல, துரோனாச்சார்யா விருதுக்கு வில்வித்தை வீரர் தர்மேந்திர திவாரி, தடகள வீராங்கனை புருஷோத்தம் ராய், குத்துச்சண்டை வீரர் சிவ்சிங், ஹாக்கி வீரர் ரோமேஷ் பதானியா, கபடி வீரர் கிருஷண் குமார் ஹூடா, பாரா பவர் லிஃப்ட் வீரர் விஜய் பாலசந்திர முனிஷவர், டென்னிஸ் வீரர் நரேஷ் குமார், மல்யுத்த வீரர் ஓம் பர்காஷ் தாஹியா ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
அர்ஜுனா விருதுக்கு 27 பேர், தியான் சந்த் விருதுக்கு 15 பேர் உள்பட மேலும் நான்கு பிரிவுகளுக்கு தேர்வான வீரர்களின் பெயர்களையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
விருதுக்கு தேர்வானவர்களுக்கு வரும் 29ஆம் தேதி டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் காணொளி வாயிலாக விருது வழங்கும் நிகழ்ச்சியில் விருது வழங்கப்படும் என்று இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி, விராட் கோஹ்லி ஆகியோருக்கு பிறகு கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நான்காவது வீரராகியிருக்கிறார், ரோஹித் சர்மா.
1998 ஆம் ஆண்டில் கேல் ரத்னா விருதைப் பெற்ற முதல் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். 2007 ஆம் ஆண்டில் டி 20 உலகக் கோப்பைக்கு இந்தியாவை வழிநடத்திய பின்னர் தோனிக்கு கேல் ரத்னா விருது கிடைத்தது. விராட் கோலி, 2018 ஆம் ஆண்டில் இந்த விருதை வென்றார்.
2016ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரே நேரத்தில் 5 விளையாட்டு வீரர்களின் பெயர்கள் ராஜீவ் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்படுவது இந்த ஆண்டு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க: கிரிக்கெட்டில் 5 உலக சாதனைகள் படைத்த தோனி ஒரு சகாப்தம்